
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே நடுக்கூட்டுடன்காட்டைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 39). இவர் தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் ஆபரேஷன் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளவர்களிடம் நிலக்கரியை வாங்கி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாட்கா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்திற்கு கோவில்பட்டியிலும் கிளை அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பாக புதிய துறைமுகத்திலிருந்து நிலக்கரி லோடுகளை லாரிகளில் ஏற்றி செல்வதற்கான வாடகை பணத்தை வாங்கி ஷிப்பிங் அலுவலகத்தில் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஷிப்பிங் அலுவலகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். இந்நிலையில் பக்கத்து கடைக்காரர் திருமால் என்பவர் நேற்று காலை தனது கடையை திறக்க வந்துள்ளார்.
அப்போது அவரது கடையின் பூட்டு உடைந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பணம் எதுவும் திருடப்படவில்லை என்பது தெரியவந்தது. அப்போது பக்கத்து ஆபீசான ஷிப்பிங் நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, அதன் மேலாளர் புஷ்பராஜூக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே ஷிப்பிங் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது, பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த லாரி வாடகை பணம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுபோல் அருகில் உள்ள கார்த்திக் என்பவரது கடையையும் உடைத்து அங்கிருந்த ரூ.54 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷோபாஜென்சி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.