தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

1 week ago 7

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் யானை சுப்புலட்சுமி. பக்தர் ஒருவரால் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானை என கூறப்படுகிறது. இந்த யானையை பராமரிக்க குன்றக்குடி மலை அடிவாரத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று நள்ளிரவில் திடீரென இந்த கொட்டகையில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. வெப்பம் தாங்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் யானை பிளிறியது. ஒரு கட்டத்தில் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்துவிட்டது. யானை பிளிறிய சத்தம் கேட்டு கோவில் காவலாளி, பாகன் உள்ளிட்டோர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் கொட்டகை பெருமளவு எரிந்துவிட்டது. யானைக்கு என்ன ஆனது என்று பார்த்தபோது, அது சற்று தூரத்தில் நின்று கொண்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் அங்கு வந்து யானையை ஆசுவாசப்படுத்தினர். ஆனால், அதன் தும்பிக்கை, முகம், தலை, வயிறு, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்ததை அறிந்தனர். யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். காயத்திற்கு மருந்து போடப்பட்டது.

இதுகுறித்து குன்றக்குடி போலீசார் விசாரணை செய்தனர். மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளித்தும், பலனின்றி யானை உயிரிழந்தது. தீ விபத்தில் சிக்கி கோவில் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோயில் யானை சுப்புலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

Read Entire Article