திருவோணம்

17 hours ago 2

நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

கால புருஷனுக்கு இருபத்தி இரண்டாவது (22) நட்சத்திரம் திருவோணம். இந்த நட்சத்திரம் பெருமாளுக்குரிய மகாவிஷ்ணுவின் பெருமைமிகு நட்சத்திரமாக உள்ளது. ஆவணி மாதத்தில் கேரளாவில் கொண்டாடப்படும் திருஓணப் பண்டிகை இந்த நட்சத்திரத்தில்தான் சிறப்புறுகிறது. திருவோணம் நட்சத்திரத்தின் சமஸ்கிருத பெயர் ஷ்ரவன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரம் முழுமையான நட்சத்திரம். இந்த முழுமையான நட்சத்திரம் சமஸ்கிருதத்தில் கடலில் வாழ்ந்த முதலை போன்ற ஒரு வகையான கடல்வாழ் உயிரினத்தை குறிக்கிறது. இந்த நட்சத்திரம் இரவில் கழுகின் வடிவம் போல் உள்ளது. ‘‘ஓணத்தில் பிறந்தால் கோணத்தை ஆள்வான்’’ என்ற வழக்கு மொழி உள்ளது.

திருவோணம் நட்சத்திரத்தின் வேறு பெயர்கள் சோணை,சிரவணம்,உலக்கை.
திருவோணத்தில் அவதரித்தவர்கள் வாமனன்,விபீசணன்,அங்காரகன் ஆகியோர் ஆவர்.
எருக்கு மரங்கள் தலவிருட்சமாக உள்ள தலங்கள் சிறப்பு பெறுகின்றன காரணம் தீய சக்திகளை விலக்கும் தன்மை கொண்டதாகவும் நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளதாகவும் உள்ளது. மேலும், எருக்கு வெள்ளை எருக்கன் விசேஷ சக்தி கொண்டவையாக உள்ளன. சூரியனார் கோயிலில் தல விருட்சமாக உள்ள மரம் எருக்கு மரமாகும். சூரியனின் சக்திக்கு எருக்கு மரத்திற்கும் சந்திரனுக்கும் ஒரு நெருக்கமான தொடர்புண்டு. அதாவது, சூரியனின் கதிர்களை ஈர்த்து பிரதிபலித்து சந்திரன் குளுமையான கதிர்களை பூமிக்கு வழங்குகிறது. அதுபோலவே, சூரியனின் கதிர்களை ஈர்த்து எருக்கு மரம் அந்த சக்திகளை மறுபடியும் வெளியிடுகிறது.

திருவோணப் புராணம்

வாமனம் என்றால் சிறிய அல்லது உயரம் குறைவாக உள்ளது என்று பொருள்படும். மஹாவிஷ்ணு தர்மத்தை நிலைநாட்டவும் தேவர்களுக்கு உதவி செய்யவும் ஐந்தாவதாக எடுத்த அவதாரம்தான் வாமனன்.அதிதி காஷ்யபர் தம்பதியின் மகனாக வாமனன் என்ற மகாவிஷ்ணு அவதரித்தார். அதுபோலவே, மகாபலி முற்பிறவியில் எலியாக பிறந்திருந்தார். அந்த எலி ஒரு சிவன் கோயிலில் நுழைந்தது. அவ்வாறு நுழைந்த எலியின் வால் எதேச்சையாக அணையும் நிலையில் இருந்த விளக்கின் திரி மீது பட்டு அந்த விளக்கு தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. அதன் காரணமாக சிவபெருமான் அந்த எலிக்கு சக்ரவர்த்தியாக வாழும் யோகத்தை தந்தருளினார். தன்னை நாடி வந்தவர்களுக்கெல்லாம் பொருளை வாரி வழங்கி நல்லாட்சி செய்தார். மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு நல்லாட்சி செய்தார். இவரை அசுர குருவான சுக்ராச்சாரியார் வழிநடத்தினார். லெட்மி தேவியின் ஆசீர்வாதத்தை பெற்றவராக வாழ்ந்தார்.

சுக்ராச்சாரியார் ஏழு உலகமும் மகாபலியின் ஆளுகைக்குள் வருவதற்கு ஒரு யாகம் நடத்தினார். அந்த யாகம் முடிந்து வருபவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என்ற சம்பிரதாயம் இருந்தது. அச்சமயம் வாமனனாக பிராமண ரூபத்தில் மஹாவிஷ்ணு மகாபலியிடம் தானம் பெற வந்தார். சுக்ராச்சாரியார் தனது ஞான திருஷ்டியால் வந்திருப்பது மஹாவிஷ்ணுதான் என கண்டறிந்து மகாபலியிடம் எச்சரிக்கை செய்தார். அதை கண்டுகொள்ளாத மகாபலி மகாவிஷ்ணுவே என்னிடம் கேட்பது எனது புண்ணியம் எனக் கூறி என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றார். வாமனன் பதிலுக்கு மூன்றடி மண் கேட்டார். மகாபலி தர சம்மதித்தான். பின்னர், தனது விஸ்வரூபத்தை எடுத்து பூமியை ஒரடியாகவும் வானத்தை ஒரடியாகவும் வைத்து பின்பு மகாபலியின் தலையில் ஒரடி வைத்து பாதாள உலகத்தின் அரசனாக்கினார். இதுவே திருவோண நன்நாளின் மிகச்சிறந்த பெருமையாகும்.

பொதுப்பலன்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு சந்திரன் நல்ல யோகக் காரகனாக உள்ளார். காலபுருஷனின் தத்துவப்படி இது மூன்றாவது சந்திரனின் நட்சத்திரமாகும். இங்கு அமர்ந்துள்ள சந்திரன் தனது சொந்த வீடான கடகத்தை பார்வை செய்வதால் பலம் பெறுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இரக்கம், மனிதாபிமானம் கொண்டவர்களாக இந்த நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். கோபம் கொண்டாலும் மன்னிக்கும் மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாயின் மீது அன்பும் கடவுள் பக்தியும் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள்.

ஆரோக்கியம்

திருவோணத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்களுக்கு நீரால் அடிக்கடி பிரச்னைகள் உண்டாகும். மனநிலை பாதிப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம் ஜல கிரகமான சந்திரன் சனியின் வீட்டில் அமர்ந்திருந்தால் சில நேரங்களில் நீர் வற்றுதல் போன்ற பிரச்னைகளால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றது. மன உளைச்சல் மற்றும் ரத்த அழுத்தம் உண்டாகிறது.

திருவோணத்திற்குரிய வேதை நட்சத்திரம்…

வேதை என்பது தொந்தரவுகளையும் மனஸ்தாபங்களையும் ஏற்படுத்தக் கூடிய நட்சத்திரமாகும். புனர்பூசம் என்பது வேதை நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திர நாளில் புதிய காரியங்களை தொடங்குவது வேண்டாம்.

பரிகாரம்

இந்த திங்கட்கிழமை தோறும் சந்திரனுக்கோ அல்லது அம்பாளுக்கோ அபிஷேகம் அர்ச்சனை செய்து கொள்வது நன்மை தரும். இந்த நட்சத்திரத்திற்குரிய நாளில் எருக்கு மரத்தை நடவு செய்வது நன்மை தரும். மேலும், திங்கட்கிழமை அல்லது வியாழக்கிழமை வரும் திருவோண நட்சத்திர நாளில் திருக்கோயிலூரில் உள்ள உலகளந்த பெருமாளாகிய திருவிக்ரமகோயிலுக்கு அல்லது சீர்காழியில் உள்ள திருவிக்ரமாவாமனர் கோயிலுக்கு சென்று வழிபடுவது நன்மை தரும். இந்த கோயில்கள் பூமி தோஷத்தை நிவர்த்தி செய்கின்ற அமைப்பை கொண்டுள்ளது என்பது சிறப்பு.

The post திருவோணம் appeared first on Dinakaran.

Read Entire Article