திருவொற்றியூர் தொகுதியில் 1,500 பேருக்கு வீட்டுமனை பட்டா: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

17 hours ago 2

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கே.பி.சங்கர் எம்எல்ஏ, சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் ஆவணங்களை சில மாதங்களாக சரிபார்க்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு முதல்கட்டமாக எண்ணூர், கத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்த 1500 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திருவொற்றியூரில் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சென்னை மாவட்ட கலெக்டர் ரேஷ்மி சித்தார்த் ஜகடே வரவேற்றார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 1500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி பேசியதாவது. இந்த பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே கத்திவாக்கத்துக்குபலமுறை வந்துள்ளேன். கடந்தாண்டு பெஞ்சால் புயலின்போது உங்களுடன் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டோம். திராவிட மாடல் அரசு எப்பொழுதுமே சொன்னதை செய்யக்கூடிய அரசு. நமது முதல்வர் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து சாதனை படைத்து வருகிறார்.

சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். இதன்படி வருவாய் துறை அமைச்சர் தலைமையில் பட்டா வழங்குவதற்காக ஒரு குழுவை நியமித்தார். இவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆய்வுசெய்து பட்டா கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்அடிப்படையில் மாதவரத்தில் 2500 பேருக்கும் சோளிங்கநல்லூரில் 2,100 பேருக்கும் பட்டாவை வழங்கினேன். திருவொற்றியூர் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 2,120 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று 1,500 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது.

வடசென்னை அனல் மின் நிலையத்துக்கு இடம் கொடுத்தவர்கள் 400 பேருக்கு பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. இதை கேள்விப்பட்ட முதல்வர் உடனடியாக இவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்அடிப்படையில் 35 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத 400 பேருக்கு தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார். விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், நந்தகோபால், மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி எஸ்.கணேசன், அயலகஅணி மாவட்ட தலைவர் லையன் எஸ்.டி.சங்கர், பகுதி செயலாளர்கள் அருள்தாசன், துக்காராமன்,தயாளன் புழல் நாராயணன், கருணாகரன், அற்புதராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எம்.எம்.செந்தில், வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் லயன் தியாகராஜன், வழக்கறிஞர் அணி பகுதி அமைப்பாளர் பொன்னிவளவன், திருவொற்றியூர் மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.தமிழ்மாறன் என்ற மனோஜ் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருவொற்றியூருக்கு வருகைதந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சென்னை வடகிழக்கு மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஏராளமான தொண்டர்கள், மகளிரணி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வரவேற்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் இரண்டு புறமும் வரிசையாக கிராமிய பாடல், தாரை தப்பட்டை, மங்கள வாத்தியங்கள் முழங்க பூக்களை தூவி பிரமாண்டமாக வரவேற்பு அளித்தனர்.

The post திருவொற்றியூர் தொகுதியில் 1,500 பேருக்கு வீட்டுமனை பட்டா: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article