திருவண்ணாமலையில் 2 நாளாக 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம்

1 day ago 3

* ஒரு கி.மீ. தூரத்துக்கு நீண்ட தரிசன வரிசை

* 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
புரட்டாசி மாத பவுர்ணமியைெயாட்டி திரண்டனர்

திருவண்ணாமலை, செப்.19: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இரண்டாவது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர். நினைக்க முக்தித் தரும் திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, பிரசித்தி பெற்ற புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் காலை 11.22 மணிக்கு தொடங்கி, நேற்று காலை 9.04 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அதன் தொடர்ச்சியாக, கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 9.04 மணி வரை நீடித்ததால், புரட்டாசி மாத பவர்ணமியின் இரண்டாம் நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது. குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று பவுர்ணமி அமைந்ததாலும், அன்று எதிர்பாராமல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும், வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தந்தனர். அதனால், திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் நிலை காணப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கும் போதே, தரிசனத்துக்காக தேரடி வீதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் ஒரு கி.மீ தூரத்துக்கும் அதிகமாக தரிசன வரிசை நீண்டிருந்ததாதல், 4 மணி நேரத்துக்கும் மேலாக தரிசனத்துக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், 14 கி.மீ தூரம் கிரிவலம் சென்று முடித்த சோர்வையும் பொருட்படுத்தாமல், சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. வரிசையில் காத்திருந்த முதியவர்கள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

The post திருவண்ணாமலையில் 2 நாளாக 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் appeared first on Dinakaran.

Read Entire Article