திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து களஆய்வு நடத்த முடிவு

1 day ago 2

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றும் நடவடிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இரண்டாவது கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது.திருவண்ணாமலை கிரிவலப்பாதை, மலைப்பகுதி மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர் எம்.சி.சுவாமி தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த குழுவினர் திருவண்ணாமலையில் களஆய்வு நடத்தி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தது.

அதன் அடிப்படையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் தலைமையில் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, குழுவின் இரண்டாவது குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. அதில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், டிஆர்ஓ ராமபிரதீபன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எந்த அளவில் உள்ளது, அவற்றை அகற்றுவது நடைமுறை சாத்தியம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், கிரிவல பக்தர்களுடைய வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போதுள்ள கிரிவல பாதையினுடைய அகலம் போதுமானதாக உள்ளதா, எந்தெந்த இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக நெரிசல் ஏற்படுகிறது, நிரந்தர கட்டிடங்களால் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், கோயில் நிர்வாகம் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகள் குறித்து களஆய்வு நடத்தி அடுத்து நடைபெறும் குழு கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

The post திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் குளங்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து களஆய்வு நடத்த முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article