அது என்னவோ தெரியவில்லை. ‘‘பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்’’ என்பது போல, சிலர் ஜாதகத்தைக் கையில் எடுத்தவுடன், ‘‘இது நாகதோஷ ஜாதகம்’’ என்று நாலடி தள்ளி வைத்து விடுகின்றார்கள். ஜாதகத்தைப் பார்த்து தோஷம் சொல்வது என்பது மிக எளிதாக இருக்கிறது. காரணம், ராகு லக்கினத்தில் இருந்தாலும், இரண்டாம் இடத்தில் இருந்தாலும், எட்டாம் இடத்தில் இருந்தாலும், ஏழாம் இடத்தில் இருந்தாலும், தோஷம் என்று சொல்லிவிடுகிறார்கள். இதற்கு அடிப்படை, மூன்று, ஆறு, பதினொன்று தவிர மீதி இடத்தில் ராகு-கேது இருப்பது சரியல்ல என்று பல ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அது ஒரு பொதுவான கருத்துதான். ஆனால், நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது, ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன், 12 கட்டங்களில் உள்ள கிரக அடைவை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. அதிலே கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
முதலில் தோஷத்தின் அளவை பார்க்க வேண்டும். அது தரும் காலம் முக்கியம். ஒரு குறிப்பிட்ட தோஷத்தைத் தருவதற்கு சக்தி வாய்ந்தவன் தசாநாதன்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஜாதக கட்டத்தைப் பார்த்து ராகு தோஷம், கேது தோஷம் என்று தூக்கிப்போட்டு விடுவதால் எத்தனையோ திருமணங்கள் நின்று விடுகின்றன. ஸ்தூலமான கிரகநிலைகளை வைத்துக் கொண்டு எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. நிறைய ஆராய வேண்டும். திருமணக் காலத்தில் இப்படி அரைகுறையாக ஜாதகத்தைப் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்லுவேன். அதைவிட பார்க்காமலே கூட முடித்துவிடலாம். காரணம் என்ன என்று சொன்னால், என்னதான் ஜாதகம் பார்த்தாலும்கூட, எந்தப் பள்ளத்தில் எந்தத் தண்ணீர் போய்ச் சேர வேண்டுமோ, சேர்ந்துவிடும். வழி அடைத்தாலும்கூட மாற்று வழியில் அடைந்துவிடும். எந்தக் கொம்பில் எந்த கொடி படர வேண்டுமோ, அது தானாகவே படர்ந்துவிடும். இதை நீங்களோ நானோ இணைத்துவிட முடியாது. நீங்கள் இணைக்கிறீர்கள் என்று சொன்னால் அந்த பாக்கியம் (நுகர்வினை) அவர்களுக்கு இருக்கிறது என்றுதான் பொருள். எனவே, நீங்கள் பார்க்காவிட்டாலும் அது ஏதோ ஒரு வழியில் இணைந்துவிடும் என்பது, நான் கண்ட உண்மை. அதனால்தான் சில திருமணங்கள், குறிப்பாக காதல் திருமணங்கள், ஜாதகம் பார்க்காவிட்டாலும்கூட இயல்பாகவே சேர்ந்துவிடுகிறது.
‘‘இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று” என்பது இதைத்தான். அதே சமயத்தில், மிக நுட்பமாகப் பார்த்து முடிவு செய்ததுகூட, சில நேரங்களில் தவறான முடிவாகி விடுகிறது. ஒரு விதத்தில் அது தவறான முடிவு அல்ல, அது அப்படித்தான் ஆக வேண்டும். எல்லாம் ஆனபிறகு, அதே ஜாதகத்தை நீங்கள் வேறு ஒரு ஜோதிடரிடம் காட்டினீர்கள் என்று சொன்னால், ‘‘யார் ஐயா இந்த ஜாதகத்தை சேர்த்து வைத்தது?’’ என்பதை முதல் கேள்வியாக கேட்பார். ‘‘ஐயா, இதை மூன்று பேரிடம் காண்பித்தேன். மூன்று பேரும் சேர்க்கலாம் என்று சொன்னார்கள். அதனால்தான் சேர்த்தேன்’’ என்பார். அந்த மூன்று ஜோதிடர்களும் இதைப்போல எத்தனையோ ஜாதகங்களைச் சேர்த்து வைத்திருப்பார்கள். அதில் 70, 80 சதவீதம் பேர் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனாலும்கூட இது அவர்களுக்கு இது ஒரு பழுதாகிவிடும். காரணம், ஜோதிடத்தின் மிக நுட்பமான விஷயத்தை அவ்வளவு எளிதாக நிர்ணயித்துவிட முடியாது. இங்கே, ராகு-கேது முதலிய விஷயங்களில் ஸ்தூலமான நிலையைத்தான் பார்க்கின்றார்களே தவிர, உள்ளே நுழைந்து பார்ப்பதில்லை.
குறைந்தபட்சம் அது எந்த பாகையில் இருக்கிறது என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால்கூட பாவ சக்கரத்தில் அதனுடைய ஸ்தானபலம் மாறும். ஆறில் அமர்க்களமாக உட்கார்ந்து இருக்கும் ராகுவை, ஏழில் உட்கார்ந்து இருப்பதாகக் கருதி தோஷம் என்பார்கள். இந்தக் கணக்குகளை எல்லாம் போட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய நேரம் இன்றைய ஜோதிடர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து, ராகு-கேது வாங்கிய சாரம் என்ன என்று பார்க்க வேண்டும். இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய ராகு-கேது அல்லாத ஒரு கிரகம், ராகு-கேதுவின் சாரத்தை வாங்கி இருந்தால், அதாவது அந்தக் கிரகம் ராகு கேதுவின் நட்சத்திரங்களான அசுவனி, மூலம், மகம், திருவாதிரை, சுவாதி, சதயம் முதலிய நட்சத்திர சாரம் பெற்று இருந்தால், அந்தக் கிரகம் ராகு-கேது போலவே பல விஷயங்களைச் செய்ய ஆரம்பித்துவிடும். இதைவிட இன்னொரு விஷயம் இருக்கிறது. தசை புத்தி பார்க்காமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. ஜாதகத்தில் ஏற்கனவே இரண்டாம் இடத்திற்கு உரிய ராகு திசை கடந்து போயிருந்தால், உதாரணமாக அவர் திருவாதிரை நட்சத்திரத்திலே, இரண்டாம் மூன்றாம் பாதத்தில் பிறந்திருந்தால், அவருடைய பதினைந்து வயதுக்குள்ளேயே அவருக்கு ராகு தசை முடிந்து போய் இருக்கும். பிறகு, ராகு தசை அவருக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.
பிறகு, இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகுவை குறித்து அதிகமாக ஏன் கவலைப்பட வேண்டும்? என்னதான் ராகு புக்தியில் சில இடையூறுகள் வரும் என்றாலும்கூட, தசாநாதனை மீறி அந்த ராகுவால் என்ன செய்துவிட முடியும்? இதையும் கவனத்தில் கொண்டுதான் பார்க்க வேண்டும். தோஷ சாம்யம் என்று ஒரு விஷயத்தைச் சொல்லுகின்றார்கள். அதுகூட பலரும் அரைகுறையாகத்தான் சொல்லுகின்றார்கள். அனுபவத்தில் சில ஜாதகங்களில் எடுபடுகிறது சில ஜாதகங்களில் எடுபடவில்லை. தர்க்க ரீதியாகவும் சரியாக வரவில்லை. ஒரு சாரார் தோஷம் என்பது ஒரு தோஷத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு எதிர் ஜாதகத்தில் பலம் (counter force) இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். சிலர், பெண் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் ராகு இருந்தால், ஆண் ஜாதகத்தில் லக்னத்திலோ இரண்டாம் இடத்திலோ ராகு-கேது இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்னும் சில பேர் லக்னத்திற்கு மட்டும் பார்க்கக் கூடாது. ராசிக்கும் சேர்த்து (சிலர் சுக்கிரனுக்கும்) இந்த தோஷத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால், அநேகமாக வருகின்ற ஜாதகங்களில் 70% ஜாதகங்களுக்கு இந்த தோஷம் இல்லாமல் இருக்காது. எனவே, மேம்போக்கான ராகு-கேது நிலையை வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது பயன் தராது.
The post திருமணத்தடை தருமா ராகு-கேது? appeared first on Dinakaran.