திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு விவகாரம்; தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்: அமைச்சர் நாரா.லோகேஷ் ஆவேசம்

2 hours ago 3

திருமலை: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் விவகாரத்தில் தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம் என அமைச்சர் நாரா. லோகேஷ் தெரிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் மகனும், அம்மாநில கல்வித்துறை அமைச்சருமான நாரா.லோகேஷ் திருப்பதி விமான நிலையத்தில் அளித்த பேட்டி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், திருப்பதி தேவஸ்தானத்திற்கென புதிய செயல் அதிகாரி நியமித்தோம்.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பிரசாதங்கள் உள்ளிட்டவற்றில் பல முறைகேடுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் உள்ளதால் தீவிரமாக ஆய்வு செய்ய கேட்டிருந்தோம். அதன்படி முதலாவதாக திருப்பதி லட்டு பிரசாத மூலப்பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் லட்டு பிரசாதம் தயார் செய்ய பயன்படுத்தும் நெய்யில் பன்றி, மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத்தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளார். அவர் ஆதாரம் இல்லாமல் எதையும் பேச மாட்டார்.

தற்போது திருப்பதி லட்டு பிரசாத நெய்யில் உள்ள கலப்பட பொருட்கள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முறை எங்கள் ஆட்சியின்போது கர்நாடக அரசின் கேஎம்எப் நிறுவனத்திடம் தரமான நெய் கொள்முதல் செய்து பிரசாதத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதன்பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தனிநபருக்காக அந்த நெய் டெண்டரை ரத்து செய்து அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கி உள்ளனர். அந்த நெய்யில்தான் தற்போது கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டோம்.

கடந்த முறை நடந்த அனைத்து தவறுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். திருமலையில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், அன்னப்பிரசாதம் உள்ளிட்டவை தற்போது தடையின்றி வழங்கப்படுகிறது. பணம் இருப்பவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. பக்தர்களையும் கடவுளையும் பிளவுபடுத்தும் நோக்கில் கடந்த ஆட்சி இருந்தது.

இதனால் பத்தாயிரம், லட்சம், கோடி என ரூபாயின் மதிப்பில் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இவற்றையெல்லாம் மாற்றி வருகிறோம். தேவஸ்தானத்தில் நடந்த பல முறைகேடுகள் குறித்து விஜிலென்ஸ் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்.

ரூ500 கோடி கமிஷன் குறித்து விசாரணை
மேலும் அவர் கூறுகையில், மாநிலத்தில் கடந்த ஆட்சியின்போது வழங்கிய ஒப்பந்தங்களுக்கு ரூ500 கோடி வரை கமிஷன் கைமாறியதாக புகார் உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரிக்கிறோம். இந்த விசாரணையில் தவறு நடந்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால் வருவாய் திரும்ப பெறும் சட்டம் (ரெவென்யு ரெக்கவரி ஆக்ட்) கொண்டு வந்து அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜெகன்மோகன் ஆட்சியில் டி.பி.ஆர். பாண்ட், செம்மர கடத்தல் என பல்வேறு முறைகள் நடந்துள்ளது என்றார்.

The post திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு விவகாரம்; தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்: அமைச்சர் நாரா.லோகேஷ் ஆவேசம் appeared first on Dinakaran.

Read Entire Article