தி.மு.க. முப்பெரும் விழா தொடங்கியது

2 days ago 4

சென்னை,

தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தி.மு.க.'முப்பெரும் விழா' சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்போது தொடங்கி உள்ளது. தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, கடந்த 1985ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கவுரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மு.க.ஸ்டாலின் விருதை' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்விழாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நேரில் வந்து தமிழ்நாடு முதல்-அமைச்சரை வாழ்த்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்று பேசுகிறார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டு திடலை நோக்கி தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தி.மு.க.வின் 75 வருட பயணம் மற்றும் கட்சி சந்தித்த சோதனைகள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் மாநாட்டு திடலை சுற்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

Read Entire Article