சென்னை: “தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழகத்தையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்தியவர்,” என்று உலகத் தமிழராய்ச்சி நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழ்வழியில் படித்து, தமிழிலேயே குடிமைப் பணித் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆகி, தமிழாராய்ச்சியின் பரப்பைத் தமிழகத்தையும் தாண்டி, ஏன் இன்றைய இந்திய நாட்டையும் தாண்டி அகலப்படுத்திய அறிஞர் பாலகிருஷ்ணன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையொட்டி மகிழ்ச்சி நிறைந்த மனத்தோடு வாழ்த்தினேன். 1812-ல் வெளியான திருக்குறளின் முதல் அச்சுப் பதிப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவர் பணி சிறந்து, தொல்தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும்” என்று கூறியுள்ளார்.