தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. “அண்ணா…. பெல்ட்டால அடிக்காதீங்க…என்னை விட்டுடுங்க…ப்ளீஸ்…” என ஒரு இளம்பெண் கண்ணீர் மல்க கெஞ்சியதும், “டேய்… உன்னை நம்பித்தானே வந்தேன்…’’ என்று ஒரு இளம்பெண் மனமுடைந்து அழுத குரலும் இன்னும் நம் காதுகளில் எதிரொலித்து கொண்டே இருக்கின்றன.
சினிமா ஷூட்டிங், சுற்றுலா என்றால் உடனே பொள்ளாச்சி என்று அனைவரது சாய்ஸாக இருக்கும். இவ்வாறு இருந்த பொள்ளாச்சிக்கு அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் கரும்புள்ளியாக மாறிவிட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இளம்பெண்களை தோட்டத்து வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து பணம் பறிப்பதையும், பின்னர் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை தன்னோட நண்பர்களுக்கும் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய கொடூரம், தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி அருகே ஜோதிநகர் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த சபரிராஜன் (25) என்பவரும், பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவியும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 2019 பிப்ரவரி 12ம் தேதி உடுமலை ரோடு ஊஞ்சவேலாம்பட்டிக்கு மாணவியை வருமாறு, சபரிராஜன் போனில் அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மாணவி, ஊஞ்சவேலம்பட்டிக்கு சென்றபோது, அங்குள்ள ஒரு காரில் சபரிராஜன் அமர்ந்து கொண்டு உள்ளே வருமாறு அழைத்துள்ளார். மாணவி மறுக்கவே, சிறிது நேரத்தில் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினார். அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த, சபரிராஜனின் நண்பர்களான மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (26), சூளேஸ்வரன்பட்டி பூங்கா நகரை சேர்ந்த சதீஸ் (29), பக்கோதிபாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (29) ஆகிய மூவரும் அந்த காரில் ஏறிக்கொண்டனர்.
அதன்பின், காரை திருநாவுக்கரசு, தாராபுரம் ரோட்டில் ஓட்டி சென்றார். தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு மில் அருகே சென்று காரை நிறுத்தியவுடன் காரில் இருந்த அந்த மாணவியின் ஆடையை கலைந்து, சபரிராஜன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நேரத்தில், காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த சதீஸ், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதையடுத்து, சில்மிஷம் செய்த படத்தை மாணவியிடம் காட்டியதுடன் இதனை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டினர். இதனால் மாணவி அதிர்ச்சியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். ஒரு கட்டத்தில், மாணவியிடம் அந்த கும்பல், பணம் கேட்டு மிரட்டியுள்ளது. மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், மாணவி அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தங்க செயினை பறித்துவிட்டு, வெளியே தள்ளிவிட்டு, அந்த நான்கு பேரும் காரில் மின்னல் வேகத்தில் பறந்தனர்.
அதன்பிறகும் சபரிராஜன், அந்த மாணவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணம் கொண்டு வா இல்லையென்றால், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அதன்பின், பிப்ரவரி 24ம் தேதி அந்த மாணவி, பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்கம், வழிப்பறி செய்தல், பாலியல் தொல்லை, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு தான், இந்த கும்பலின் பாலியல் அத்துமீறல்களும், கொடூரங்களும் வெளி உலகிற்கு தெரியவந்தது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த காமக்கொடூர கும்பலில் உள்ள அனைவரும் நண்பர்கள். கல்லூரி மாணவி மற்றும் பள்ளி மாணவிகளின் செல்போன் எண்னை கண்டுபிடித்து நட்பாக முதலில் பேசி பழகி வந்துள்ளனர். மேலும், சமூக ஊடகங்களில் அழகான இளம்பெண்களின் புகைப்படம் இருந்தால், அந்த பெண்ணிடம் முதலில் நண்பர்களாக பழகுவார்கள். பின்னர், செல்போனில் ஆசை வார்த்தை கூறி தங்களது வலையில் வீழ்த்துவார்கள்.
அப்படி வலையில் தனித்தனியாக சிக்கிய கல்லூரி மாணவிகள் சிலரை, ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள இவ்வழக்கின் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசின் தோட்டத்து வீட்டிற்கு அழைத்து சென்று தனிமையில் இருப்பதும், அவ்வாறு தனிமையில் இருக்கும் போது நண்பர்களின் உதவியோடு செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் மிரட்டலில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். ஆடம்பர செலவு செய்ய பணம் தேவைப்பட்டால், வீடியோ எடுத்து வைத்த பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். மேலும், ஆபாச வீடியோக்களை வைத்துக்கொண்டு மீண்டும், மீண்டும் தங்களது இச்சைக்கு இணங்க வைத்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாது தங்களது நண்பர்களின் ஆசைக்கும் இணங்க வைத்தனர். இந்த கும்பல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல கல்லூரி மாணவிகளையும், பெண்களையும் மயக்கி நாசப்படுத்தியதும் போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஸ் (28) ஆகிய 4 பேர் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் நடந்த மேல்விசாரணையில் மணிவண்ணன் (25), ஹேரன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 5 பேர் கடந்த 2021ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். மொத்தம் 9 பேர் கைதான நிலையில் இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோகான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.
கைதான 9 பேரிடம், சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்ததையடுத்து கடந்த மாதம் 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையானது கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இருதரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்து நேற்று 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்்பு வழங்கப்பட்டுள்ளது.
‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வந்த போது தான் பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கு முதலில் சாதாரணமாகவே கையாளப்பட்டது. இச்சம்பவத்தில் போலீசார் ஆரம்பத்தில் மெத்தனமாக இருந்ததற்கு அதிமுக முக்கிய புள்ளிகளின் வாரிசுகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தான் காரணம் என்று அப்போது பரவலாக பேசப்பட்டது. அதன்பிறகு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கட்சிகள், பொதுமக்கள் என போராட்டத்தில் இறங்கிய பிறகே வழக்கு விசாரணையானது துரிதப்படுத்தப்பட்டு அடுத்த கட்ட நகர்விற்கு சென்றது. “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’’ என்று அதிமுக ஆட்சியின் அவலம் தொடர்பான வாசகங்கள் சமூக ஊடங்களில் பேசும் பொருளாக மாறியது. இது பொதுமக்களிடையே அதிமுக ஆட்சி மீதான வெறுப்பினை உருவாக்கியதோடு அதிமுக ஆட்சிக்கு கரும்புள்ளியாகவும் மாறியது.
200 ஆவணங்கள் சமர்ப்பிப்பு
இவ்வழக்கில், 50க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.
ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, அருளானந்தம், மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போது தங்களுக்கு ஜாமீன் வழங்கும்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டதில் இருந்து சேலம் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனி அறையில் நடந்த வழக்கு
வழக்கமாக பாலியல் வழக்கு அல்லாத பிற வழக்குகள் கோர்ட்டுகளில் சாதாரண நடைமுறைப்படியே நடக்கும். வழக்கு விசாரணையின் போது கோர்ட் ஹால் திறந்திருக்கும். இருதரப்பு வக்கீல்களும் கோர்ட்டில் குவிந்து இருப்பார்கள். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் கோர்ட்டில் குவிந்திருப்பார்கள். ஆனால், இந்த வழக்கு விசாரணை முற்றிலும் மாறுபட்ட நிலையில் நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் முதல் மாடியில் தனி அறை பிரத்யேகமாக அமைக்கப்பட்டு, மிக ரகசியமாக இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் நடந்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வழக்கின் திடீர் திருப்புமுனையாக பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அருளானந்தம் இவ்வழக்கின் முக்கிய நபரான திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
சிபிஐக்கு மாற்றம் ஏன்?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் தன்மையை கருதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதும், குற்றவாளிகளை பாதுகாப்பதில் அதிமுக புள்ளிகள் சிலர் பின்புலமாக இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிமுக ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் இந்த வழக்கை முடிக்க போலீசார் சுணக்கம் காட்டினர். இதையடுத்து, அரசியல் கட்சிகள், பொதுமக்கள் போராட்டம் மற்றும் பல்வேறு தரப்பினரின் அழுத்தத்தால் இவ்வழக்கை 2019 மார்ச் மாதம் சிபிஐக்கு மாற்றி அப்போதைய உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டார்.
மட்டன் பிரியாணியால் வந்த வினை
பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிமுகவை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து கோவை கோர்ட்டில் அனைவரையும் சேலம் ஆயுதப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் சேலம் அழைத்து வரும் வழியில், அனைவருக்கும் மட்டன் பிரியாணி வாங்கி கொடுக்கப்பட்டது. அவர்களின் உறவினர்கள் சமைத்து கொண்டு வந்தவற்றை கைதிகள் சாப்பிட்டனர். இவ்விவகாரம் அந்த நேரத்தில் பூதாகரமாக வெடித்த நிலையில், கைதிகளை அழைத்து சென்ற போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு, அவர்களை கோர்ட்டிற்கு அழைத்து செல்வது நிறுத்தப்பட்டது. கோவை மகளிர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக சேலம் மத்திய சிறையில் தனியாக வீடியோகான்பரன்சிங் அறை அமைக்கப்பட்டது. விசாரணை நடக்கும் நாட்களில் அந்த அறை பக்கம் யாரும் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழில்நுட்பபிரிவு ஆய்வாளர் மட்டுமே அங்கிருப்பார்.
இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங்கிலேயே நடந்தது. இறுதிக்கட்டமாக வழக்கறிஞர்களின் வாதமும் வீடியோ கான்பரன்சிங் மூலமே நடந்தது. அதன்பிறகு கடந்த 5ம்தேதி தான் அனைவரையும் பலத்த பாதுகாப்புடன் கோவை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். தீர்ப்புக்காக 2வது முறையாக நேற்று காலை 5.10 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அழைத்து செல்லப்பட்டனர்.
குற்றவாளிகளின் கிரிமினல் பயோடேட்டா
திருநாவுக்கரசு: பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்த இவர் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இளம்பெண்களை மயக்கி தனது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து பாலியல் குற்றம் செய்து அதனை வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சபரிராஜன்: பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இருப்பினும், சரியாக வேலைக்கு செல்லாமல், குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருநாவுக்கரசுடன் கூட்டு சேர்ந்து, சமூக வலைதளங்களில் பெண்களை மயக்கி வரைவழைத்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்.
சதீஸ்: பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பூங்காநகரை சேர்ந்த இவர் கடைவீதியில் ரெடிமேட் துணிக்கடை நடைத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு, பெண்களை அழைத்து வந்து சில்மிஷத்திலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு அதனை மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளார்.
அருண்குமார்: பொள்ளாச்சியை சேர்ந்த இவர் ரெடிமேட் துணிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அந்த கடையில் வைத்து நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு துணையாக இருந்ததுடன், அவ்வப்போது பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
பாபு: பொள்ளாச்சி விகேவி லே அட்டை சேர்ந்த இவர் ராஜா மில்ரோட்டில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வந்துள்ளார். தனது நண்பரான திருநாவுக்கரசுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
அருளானந்தம்: பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்த இவர் முன்னாள் நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்துள்ளார். திருநாவுக்கரசின் நெருங்கிய நண்பராக இருந்ததுடன், பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார். திருநாவுக்கரசுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டு பெண்களை மிரட்டுவதுடன், தனது நண்பர்களுக்காக, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டுள்ளார்.
வசந்தகுமார்: பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்த இவர் திருநாவுக்கரசின் நண்பராக இருந்து, அவருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
மணிகண்டன்: பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியை சேர்ந்த இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். திருநாவுக்கரசுடன் நண்பராக பழகி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
ஹேரன்பால்: பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியை சேர்ந்த இவர் உடுமலைபேட்டையில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கோவை சின்னியம்பாளையத்தில் தென்னை சீமார் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அருளானந்தத்தின் நண்பரான இவர் அவருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
‘எடப்பாடிக்கு பிறந்தநாள் பரிசு’
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பங்கேற்றார். அப்போது கருணாஸ் அளித்த பேட்டி: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அருவருக்கத்தக்க மிகப்பெரிய கொடுமை. இந்த விவகாரத்தில் அவர்களுடைய கட்சிக்காரர்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தை முடக்குவதற்காக வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். சிபிஐ நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் நல்ல சரியான ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சாமானிய மக்களுக்கு கிடைக்கும் ஒரு நல்ல தீர்ப்பாக இன்று கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் பரிசாக நீதிமன்றம் கொடுத்துள்ளதாக எனது கருத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
திக்.. திக்.. நிமிடங்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் காலை 8.30 மணிகே சேலம் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் கோவை கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் இறுக்கமான முகத்துடன் கோர்ட்டில் அமர்ந்திருந்தனர். குற்றவாளிகளில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்து வந்திருந்தனர். கோர்ட்டிற்குள் நீதிபதி ஆர்.நந்தினி தேவி வந்ததும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார். பின்னர் ஒவ்வொருக்கும் தனித்தனியாக தீர்ப்பானது மதியம் 12 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதியம் 12.40 மணிக்கு முதல் குற்றவாளி முதல் 9வது குற்றவாளி வரை தனித்தனியாக தீர்ப்பை நீதிபதி வாசித்தார். தீர்ப்பிற்கு பிறகு ஒவ்வொருக்கும் தனித்தனியாக தீர்ப்பு ஆவணங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு சேலம் மத்திய சிறைக்கு 9 பேரையும் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
விஞ்ஞான ரீதியாக வழக்கில் நிரூபித்தோம்: அரசு தரப்பு வழக்கறிஞர்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சுரேந்தர் மோகன், கோர்ட் வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்சம் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அல்லது குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டோம். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தினோம். உரிய நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல எதிர்தரப்பில் குற்றவாளிகள் அனைவரும் இளம் வயது, திருமணமாகாதவர்கள் என்றும், பெரும்பாலானோர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் இதனை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதற்கு அரசு தரப்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் முந்தைய தீர்ப்புகளை முன் உதாரணமாக கொண்டு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தோம். இந்த வழக்கு முதலில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 20 நாட்களில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்து.
இதன் பின்னர் 40 நாட்களில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. 3 மாதத்தில் 3 விசாரணை ஏஜென்சிகளுக்கு வழக்கு மாற்றப்பட்டது. வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஒருவர்கூட பிறழ் சாட்சியாகவில்லை. மின்னணு ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் அதை மீட்டு விஞ்ஞான ரீதியாக வழக்கில் நிரூபித்தோம். இந்த வழக்கில் 376(டி) குற்றப்பிரிவான கூட்டுப்பாலியல் மற்றும் 376(2என்) தொடர் கூட்டு பாலியல் ஆகியவை தெளிவாக நிரூபணம் செய்யப்பட்டதால் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 2வது குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் 5வது குற்றவாளி மணிவண்ணன் ஆகியோருக்கு அதிகபட்சமாக 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
சட்டம் தனது கடமையை செய்துள்ளது: – எல்.முருகன்
தூத்துக்குடியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்தவித பாரபட்சம் காட்டப்படாது என்று தெரிவித்தார்.
நீதி கிடைத்துள்ளது
-அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடியில் நேற்று அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பெண்களை பாராட்டுகிறேன். இத்தீர்ப்பு மக்களிடையே, குறிப்பாக பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.
பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட
குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு
நீதி கிடைத்திருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது; அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்’. என்று கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் குற்றவாளிகளை பாதுகாத்தனர் இந்த தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
– கனிமொழி எம்பி
திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்பி தூத்துக்குடியில் நேற்று அளித்த பேட்டி: பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் கொடுமைகள் அனைத்தும் நம் மனதிலே காயமாக இத்தனை ஆண்டுகள் இருந்தன. இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அந்த காயத்துக்கு மருந்திடும் ஒன்றாக, அந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற ஆணையையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து நியாயம் கிடைத்துள்ளது. பெண்கள் பாதிக்கப்படும் போது, வெளியில் தெரிவித்தால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது.
திமுக அரசு பொறுப்புக்கு வருவதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு வாக்குறுதி அளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதால், நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நிச்சயமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்காமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால் தி.மு.க மற்றும் அப்போதைய எதிர்கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற போராட்டங்களை நடத்தினோம். அதன் அடிப்படையில், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது என தேசிய குற்ற ஆவண பணியகம் கூறியுள்ளது. இந்த தீர்ப்பை பார்த்து அ.தி.மு.க வெட்கி தலைகுனிய வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் யாரை காப்பாற்ற நினைத்தார்களோ அவர்களுக்கு தற்போது தண்டனை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய நல்ல தீர்ப்பு. இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.
தீர்ப்பு நம்பிக்கை தருகிறது: வானதி சீனிவாசன்
பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
அந்தக் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்கும் சட்டம் செவி சாய்த்து நீதியை நிலைநாட்டியுள்ளது என்பதை நினைக்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது, மனம் நிம்மதியடைகிறது. பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக பாவித்து அவர்களை மிரட்டி தங்கள் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் எனத் திரியும் சிலரின் ஆணாதிக்க மனப்போக்கினை இதுபோன்ற தீர்ப்புகள் தூள் தூளாக உடைத்தெறியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்கள் இச்சைக்காக பெண்களைப் பாலியல் வேட்டையாடும் மனித மிருகங்கள் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட முடியாது. அதை நீதி காத்த இந்நல்லுலகம் வேடிக்கை பார்க்காது.
அப்பாவிப் பெண்களைத் தவறாகப் படமெடுத்து அவர்களை பெல்ட்டால் அடித்து தங்கள் ஆசைக்கு அடிபணிய வைத்த அந்தக் கொடூரர்களின் கைகள், இனி ஆயுள் வரை சிறைக் கம்பிகளை எண்ணி ஓய்ந்து போகட்டும்.
வழக்கு கடந்து வந்த பாதை
2019 பிப்ரவரி 12: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார்
2019 பிப்ரவரி 24: மேலும் ஒரு பெண் புகார், புகாரின் பேரில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது
2019 பிப்ரவரி 26: பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை திருநாவுக்கரசின் நண்பர்கள் தாக்கியதாக புகார்
2019 மார்ச் 4: அதிமுகவை சேர்ந்த பலர் சம்மந்தப்பட்டதாக திருநாவுக்கரசு ஆடியோ வெளியீடு
2019 மார்ச் 5: திருநாவுக்கரசு கைது
2019 மார்ச் 6: அப்போதைய கோவை எஸ்பி பாண்டியராஜன் புகார் அளித்த பெண்களின் பெயர்களை வெளியிட்டு சர்ச்சையானது
2019 மார்ச் 10: சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் சிறையில் அடைப்பு
2019 மார்ச் 12: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். வழக்கில் தொடர்புடைய அனைவரையும் சேர்க்கக்கோரி கனிமொழி எம்பி போராட்டம்
2019 மார்ச் 15: பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜனுக்கு கோர்ட் கண்டனம்
2019 ஏப்ரல் 9: பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் உரை
2019 மே 24: பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து வாக்குமூலம் அடிப்படையில் குற்றவாளிகள் சபரிராஜன், சதீஸ், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிகண்டன் ஆகியோர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
2019 ஏப் 25: பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றம்
2019 நவம்பர் 3: குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் ரத்து
2021 ஜனவரி 6: அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது. அதிமுகவில் இருந்து அருளானந்தம் நீக்கம்
2021 ஜனவரி 10: கனிமொழி எம்பி தலைமையில் 2வது முறையாக ஆர்ப்பாட்டம்
2021 பிப்ரவரி 22: 2வது குற்றப்பத்திரிகை தாக்கல்
2021 ஆகஸ்ட் 16: 9வது குற்றவாளி அருண்குமார் கைது. 3வது குற்றப்பத்திரிகை தாக்கல்
2021 அக்டோபர் 20: கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளிகளுக்கு பிரியாணி விநியோகம்
2024 பிப்ரவரி 23: சிபிஐ கூடுதல் ஆதாரங்கள் சமர்ப்பித்த நிலையில் 9 குற்றவாளிகளும் கோர்ட்டில் ஆஜர்
2025 ஏப்ரல் 5: குற்றம் சாட்டப்பட்ட 9 பேரிடம் நேரில் கேள்வி கேட்பதற்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாதர் சங்கம் இனிப்பு வழங்கி வரவேற்பு
அனைத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோர்ட் வளாகத்தில் குவிந்திருந்தனர். இவர்கள், இந்த தீர்ப்பை வரவேற்று, இனிப்பு வழங்கினர்.
இது பற்றி மாநில பொதுச்செயலாளர் ராதிகா கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதை மாதர் சங்கம் சார்பில் வரவேற்கிறோம். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சியில் இந்த வழக்கு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு சிபிஐ விசாரணை நடந்தது. தமிழக அரசும் பாலியல் வழக்கில் சிறப்பு சட்டம் இயற்றியது. பெண்கள், பாதுகாப்பாக சுதந்திரமாக நடமாட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்’’ என்றார்.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு:- மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறியதாவது: அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது அரசியல் பலம் இருந்த காரணத்தினால் இந்த வழக்கை ஆரம்பத்திலேயே நீர்த்து போக செய்ய முயன்றனர். அரசியல் கட்சிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் அனைத்தும் இணைந்து போராடியதன் விளைவாக, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் மிக முக்கியமானது என்னவெனில் ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சி ஆகவில்லை. இதற்கு காரணம் நீதிமன்றம் மற்றும் அரசு சார்பில் சாட்சிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும், நம்பிக்கையும், குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படாமல் சிறையிலேயே இருந்ததும்தான். சிறப்பு வழக்கறிஞர் வழக்கை சிறப்பாக நடத்தியுள்ளார்.
நீதிபதி நந்தினிதேவி மாற்றப்பட்டாலும், தொடர்ந்து இந்த வழக்கை அவரே நடத்தியதன் காரணமாக நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார். உண்மையிலேயே இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாகும். சமூகத்தில் இன்றைக்கு பணம், அரசியல் பலம் இருக்கிறது என்கின்ற காரணத்தினால் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக வன்புணர்வு மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குபவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்.
இவ்வாறு கூறினார்.
என்னென்ன பிரிவில் வழக்கு
குற்றவாளிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பிரிவுகள் வருமாறு: 120(பி) – கூட்டுச்சதி, 343 – சட்ட விரோதமாக கூடுதல், 354(ஏ) – பாலியல் சீண்டல், 354(பி) – ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துதல், 366 – ஆள் கடத்தல், 376 (டி) – பாலியல் பலாத்காரம், 376 (2என்) – கூட்டு பாலியல் பலாத்காரம், 509 – மானபங்கம் செய்தல், IT Act 66இ – ஆபாச வீடியோ எடுத்தல், IT Act 67 – ஆபாச வீடியோ பகிர்தல், 506(2) – கொலை மிரட்டல் விடுத்தல், தமிழ்நாடு வன்கொடுமை தடுப்பு சட்டம் செக்சன் 4, 393 – நகை, பணம் பறித்தல், 419 – மிமிக்ரி செய்து ஏமாற்றுதல், 384 – நகை, பணம் பறித்து கைமாற்றுதல்.
முகத்தை மறைக்காத 2 பேர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையொட்டி இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், அருளானந்தம், ஹேரன்பால், அருண்குமார், பாபு, மணிவண்ணன் ஆகிய 9 பேரை சேலம் மத்திய சிறையில் இருந்து போலீசார் காலை 8.30 மணி அளவில் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது 7 பேர் துணியால் முகத்தை மறைத்திருந்தனர். பாபு, மணிவண்ணன் மட்டும் முகத்தை மறைக்காமல் சாவகாசமாக நடந்து வந்தனர்.
The post தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பெண்களின் கதறல்: அண்ணா… என்னை விட்டுடுங்க…ப்ளீஸ்… அதிமுக ஆட்சியில் நடந்த பாலியல் கொடூரத்தின் பிளாஷ் பேக் appeared first on Dinakaran.