தனியார் உணவகத்தில் சத்துணவு முட்டைகள்; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

7 hours ago 2

சென்னை,

தனியார் உணவகத்தில் அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செயல்பட்டு வந்த தனியார் உணவகம் ஒன்றில் மதிய உணவுத் திட்டத்திற்காக வழங்கப்படும் அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

துறையூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட முட்டைகள் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்தது எப்படி? என்பது குறித்து திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உரிய ஆய்வை மேற்கொண்டு, இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் பட்சத்தில், தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

திருச்சி துறையூர் அருகே தனியார் உணவகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் - விரிவான விசாரணையின் மூலம் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செயல்பட்டு வந்த தனியார்…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 19, 2024


Read Entire Article