
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார்.
ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ வந்துள்ளது.
பி.சி.சி.ஐ வட்டாரங்கள் அளித்த தகவலின் படி இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு பும்ரா தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,
டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ஒருசேர அடுத்தடுத்து ஏன் அறிவித்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனையான காலக்கட்டமாக இருக்கும். அதே சமயம் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் சகாப்தம் தொடங்கி விட்டது என்று சொல்வேன்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்துக்கு கம்பீர் அழைத்து செல்லும் இந்திய அணி முற்றிலும் புதியதாக இருக்கும். அனேகமாக அதில் ஜஸ்பிரித் பும்ரா தான் சீனியர் வீரராக இருப்பார். டெஸ்ட் கேப்டன்ஷிப் வாய்ப்பில் பும்ராவும் இருக்கிறார். என்னை பொறுத்தவரை கேப்டன் பதவிக்கு பும்ரா தகுதியானவர். ஆனால் தேர்வாளர்கள் அவரது உடல்தகுதி அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்.
ரோகித் சர்மா, கோலி ஓய்வால் தலைமைத்துவத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகி விட்டது. இது போன்ற இங்கிலாந்து தொடரில் அனுபவம் மிகவும் முக்கியம். களத்தில் கோலியின் துடிப்புமிக்க ஆட்டத்தையும், ரோகித் சர்மாவின் அமைதியையும் நாம் தவற விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.