
புதுடெல்லி,
டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. முதல்-மந்திரியாக, ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேகா குப்தா பொறுப்பேற்று கொண்டார்.
ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். இதன்பின்னர், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா கடந்த 24-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர், ரோகிணி சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த சூழலில், டெல்லி சட்டசபையின் துணை சபாநாயகராக 6 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான மோகன் சிங் பிஸ்த் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த தேர்தலின்போது, முஸ்தபாபாத் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளர் அடீல் அகமது கானை விட 17 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவருடைய பெயரை முதல்-மந்திரி ரேகா குப்தா முன்மொழிந்த நிலையில், அவர் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இந்த நியமனம் பற்றி பிஸ்த் கூறும்போது, கட்சி என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் முடிந்த முயற்சிகளை நான் மேற்கொள்வேன் என்றார். இதற்காக, கட்சியின் மூத்த தலைவர்களான பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா மற்றும் மந்திரி சபை உறுப்பினர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.