
சென்னை,
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிராகன் 3 நாளில் ரூ.50.22 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இந்தப் படத்தில் 3 நாயகிகள் நடித்துள்ளார்கள். அதில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்த கயாடு லோஹர் 3 நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார். .
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை. இவர் தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் நடித்தற்கு பிறகு மிகவும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார்.
டிராகன் படத்தையடுத்து மீண்டும் தமிழில் 'இதயம் முரளி' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயாடு நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களை சொக்க வைக்கும் அளவுக்கு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை கயாடு லோஹர் தமிழில் பேசி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் "எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. எனக்கும் டிராகனுக்கும் பல்லவி கதாபாத்திரத்துக்கும் கிடைக்கும் வரவேற்பு மிகையான ஒன்று. திரையரங்கில் எனக்கு நீங்கள் அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதெயெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணு இல்லை. தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் எனக்கு தரும் அன்பு விலைமதிக்காதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி தருவேன். உங்களைப் பெருமைப்பட வைப்பேன்" என்று கூறியுள்ளார்.
.