சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா

2 hours ago 4

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷன்கள், குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சேலம் ரயில்வே கோட்டத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி தூய்மை இந்தியா இருவார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, ரயில்வே ஸ்டேஷன்கள், அலுவலகங்களை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று, சேலம் கோட்டம் முழுவதும் பசுமை வளர்ப்பு பணியாக மரக்கன்றுகள் நடும் விழா நடத்தப்பட்டது. சேலம் கோட்ட அலுவலகம் அருகேயுள்ள கிழக்கு ரயில்வே காலனி மற்றும் சேலம் ரயில்வே ஸ்டேஷனில் மரக்கன்றுகள் நடும் பணியை கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சாரண, சாரணியர் மற்றும் குடியிருப்புவாசிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

இதேபோல், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில் பெட்டி பராமரிப்பு மையத்தில் கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர். திருப்பூர், கோவை, கரூர், மொரப்பூர், மேட்டூர், ஆத்தூர் என கோட்டம் முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் இருக்கும் காலியிடங்களில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில், முதுநிலை கோட்ட இயந்திர பொறியாளர் சதீஷ்சரவணன், கோட்ட கூடுதல் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சுபேதா மாணிக்பான், கோட்ட பொறியாளர்கள் அங்கீத்ர்மா (கிழக்கு), பவன்குமார் (மத்தியம்), கோட்ட சுற்றுச்சூழல் மற்றும் குடியிருப்பு பராமரிப்பு மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post சேலம் கோட்டத்தில் ரயில்வே ஸ்டேஷன்களில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article