சேலத்தில் மயான கொள்ளை விழா: காளி வேடமணிந்த பக்தர்கள் ஆடு, கோழி கடித்து ஆக்ரோஷம்

4 hours ago 1

சேலம்: மாசி அமாவாசையையொட்டி சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. காளி வேடமிட்ட பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்தபடி ஊர்வலமாக சென்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அமாவாசை தினத்தில், சேலத்தில் பல நூறு ஆண்டுகளாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் 15 நாட்களுக்கு முன்பே விரதம் இருந்து மகா சிவராத்திரி அன்று அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்துகின்றனர். மறுநாள், மயான ெகாள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ேநர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதன்படி, சேலத்தில் இன்று மயான கொள்ளை விழா நடந்தது. சேலம் டவுன், பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், தாதம்பட்டி, பொன்னம்மாபேட்டை, குகை, செவ்வாய்பேட்டை, அழகாபுரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி என மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து காளி வேடமிட்ட பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் ஆடு, கோழிகளை கடித்தபடி காக்காயன் சுடுகாட்டிற்கு ஊர்வலமாக வந்தனர்.

சாமி சிலைகளை தலையில் சுமந்தபடி மயான கொள்ளைக்கு தேவையான பூஜை பொருட்களுடன் பக்தர்கள் திரண்டு வந்தனர். ஊர்வலம் வந்த தெருக்களில் நோய்நொடி, திருமண தோஷம் நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் தரையில் படுத்தனர். ஆடு, கோழிகளை கடித்தபடி காளி வேடமணிந்து வந்தவர்கள், அவர்களை மிதித்தபடியும், தாண்டியும் ஆசி வழங்கி சென்றனர். காக்காயன் சுடுகாடு பகுதியை அடைந்தவுடன் ஆக்ரோஷமாக அருள்வந்து ஆடியவர்களிடம், பொதுமக்கள் ஆசி பெற்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கடவுள் வேடமணிந்து வந்தனர்.

இதில் பலர் மண்டை ஓடு அணிந்து ஆடி வந்தது மெய்சிலிர்க்க வைத்தது. சுடுகாட்டை அடைந்ததும் ஆங்காங்கே மயானக் கொள்ளை பூஜை செய்து, வழிபாடு நடத்தினர். அப்போது ஆடு, கோழிகளை கடித்து பக்தர்கள் மீது ரத்தத்தை வீசி எறிந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல், சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் கன்னங்குறிச்சி சுடுகாட்டிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதிகளில் உள்ள அங்காளம்மன் கோயில்களில் இருந்து பக்தர்கள் காளி வேடமணிந்து, ஆடு, கோழிகளை கடித்தபடி மேள, தாளம் முழங்க சுடுகாட்டிற்கு ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர். இவ்விழாவையொட்டி காக்காயன்சுடுகாடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோர்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு தடை விதித்து, மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.

The post சேலத்தில் மயான கொள்ளை விழா: காளி வேடமணிந்த பக்தர்கள் ஆடு, கோழி கடித்து ஆக்ரோஷம் appeared first on Dinakaran.

Read Entire Article