சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி

2 hours ago 3

Chennai Corporation, Chennai Floodsசென்னை : வெள்ள அபாயத்தை தடுக்க வார்னிங் சிஸ்டம் அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றதும் சென்னையில் மழை பாதிப்பு உள்ள இடங்களை அடையாளம் கண்டு, வடிகால் சீரமைப்பு மற்றும் புதிய வடிகால் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், தற்போது சென்னை மாநகராட்சியானது தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவது உள்ளிட்டவை போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அதோடு குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்வாரியம், ரயில்வே துறை, பிஎஸ்என்எல் உள்ளிட்ட சேவை துறைகளும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. இதேபோல், மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தற்போதில் இருந்தே தன்னார்வலர்களை தயார் செய்வது, பேரிடர் காலத்தில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க இடம் தேர்வு செய்வது போன்ற பணிகளை மாநகராட்சியானது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் 3,040 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது. அதில் முதற்கட்ட பணியாக 792 கிலோ மீட்டர் கால்வாயில் 611 கிலோ மீட்டர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் 51.4 கிலோ மீட்டர் நீளமுள்ள நீர் வழி கால்வாய்களை மிதக்கும் ஆம்பியன்ட் ரோபோட் எக்ஸ்லேட்டர் மூலம் 60 சதவீதம் தூர்வரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

பருவ மழையின்போது, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் நீர்நிலைகளை தூர்வாரி, சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீர்நிலை அருகே கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு தெருக்களிலும், அக்டோபர் 1ம் தேதிக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை அமைப்பு தயார் நிலையில் வைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மாநகர பகுதிகளில் 141 இடங்களில் ஆட்டோமெட்டிக் வாட்டர் லெவல் ரெக்கார்ட் கருவி அமைக்கும் பணிகள், விரைவில் முடிவடையும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31ம் தேதி வரை இந்தப் பருவமழைக் காலத்தில் சமாளிக்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. இந்த வடகிழக்கு பருவமழையில் வெள்ளம் ஏற்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே நிவாரணப் பொருட்கள், டீவாட்டரிங் பம்புகள் மற்றும் நிவாரணக் குழுக்கள் வெள்ளம் பாதித்த தெருக்களை அடையும்.

3 நாட்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒவ்வொரு சாலைகளிலும் வெள்ளம் எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். இது தவிர சென்னையில் 14 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கும் பணி இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடையும். ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் ஒரு பகுதியாக, நகரில் மொத்தம் 78 இடங்களில் மழை அளவீடுகள் அமைக்கப்படும்,’’ என்றனர்.

தாம்பரம், ஆவடியிலும்…

வெள்ள அபாய எச்சரிக்கை இந்த பருவமழையை சிறப்பாக சமாளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வெள்ள அபாயம் பற்றிய நம்பகமான தகவல்களை சென்னை மாநகராட்சி பெறும். இதேபோல், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் வெள்ளத்தடுப்பு வசதி ஏற்படுத்தப்படும். இம்மாதம் பணிகள் முடிவடைந்தவுடன், செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்களில், நீர்வரத்து குறித்த தகவல்களை அதிகாரிகள் பெறுவார்கள்.

கட்டுப்பாட்டு அறை

எழிலகத்தில் உள்ள பிரதான கட்டுப்பாட்டு அறை, சென்னை மாநகராட்சியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், ஆவடி மற்றும் தாம்பரத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் நான்கு அண்டை மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளும் சிறந்த வெள்ள எச்சரிக்கைக்காக ஒருங்கிணைக்கப்படும்.

The post சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 141 இடங்களில் முன்னெச்சரிக்கை கருவி appeared first on Dinakaran.

Read Entire Article