சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசனை

4 hours ago 4

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான், மாநில பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநில செயலாளர் ஐ.அன்சாரி, மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, தணிக்கை குழுத்தலைவர் எம்.எஸ்.சுலைமான் ஆகியோர் சந்தித்து, ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான், அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் அளித்த பேட்டி: முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் செல்வந்தர்களும் தங்களின் பல சொத்துகளை பள்ளிவாசல்கள், அடக்கத் தலங்கள் இன்னும் பல பயன்பாடுகளுக்காக தானமாக வழங்கியுள்ளனர். இந்த வக்பு வாரியங்கள் தான் இந்தச் சொத்துகளை நிர்வகிக்கின்றன. அதில் சில சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றவும், இஸ்லாமிய சமுதாய மக்களின் உரிமைகளைப் பறிக்கவும் ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிப்பதற்கும், மதச் சார்பின்மையை மழுங்கச் செய்வதற்கும்தான் இம்மசோதா உதவுமே தவிர இதனால் இஸ்லாமியர்களுக்கு எள்ளளவும் நன்மை ஏற்படப் போவதில்லை. வக்பு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை கொண்டு வரும் இம்மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ராஜ்யசபாவில் ஓட்டெடுக்கும் சூழல் வந்தால் அதை புறக்கணிக்காமல் எதிர்த்து வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் சந்திப்பு: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article