சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் : பயணிகள் வரவேற்பு

4 hours ago 2

காஞ்சிபுரம்: சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை வரை இயக்கப்படும் மெமு ரயில், அரக்கோணத்தில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் மெமு ரயில் ஆகியவற்றில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் திருவண்ணாமலை செல்லும் பக்தர்களும், காட்பாடி வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே, இந்த மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே நிர்வாகம்,‌ சென்னை கடற்கரை – திருவண்ணாமலை, அரக்கோணம் – சேலம் ஆகிய ரயில்களில் ஏற்கனவே 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் மேற்கண்ட 2 ரயில்களிலும் கூடுதலாக தலா 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே போக்குவரத்து பிரிவு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பக்தர்களும், அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, சேலம் மார்க்கமாக செல்லும் பயணிகளும் இந்த அறிவிப்பை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

The post சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் : பயணிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article