சென்னை ஐஐடி நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறமை விளையாட்டு பயிற்சி முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

3 months ago 11

சென்னை: சென்னை ஐஐடியில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், ‘திறமை ஸ்போர்ட்ஸ் பார் ஆல்’ (Thiramai Sports 4 all) எனும் விளையாட்டு பயிற்சி கடந்த 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி இன்று (24ம் தேதி) வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த திறமை விளையாட்டு பயிற்சி முகாமில், 100க்கும் மேற்பட்ட வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.
சக்கர நாற்காலி கூடைப்பந்து, சக்கர நாற்காலி பூப்பந்து, சக்கர நாற்காலி டென்னிஸ், சக்கர நாற்காலி கிரிக்கெட், சக்கர நாற்காலி பந்தயம், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் போசியா 7 வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சியாளர்கள் உதவியுடன் பயிற்சி வழங்கப்படுகின்றது. வீல் சேர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சியை, சென்னை ஐஐடி மாணவர்களின் டீன் சத்தியநாராயணன் என்.கும்மாடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் செல்வம் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ‘‘உங்களின் தனிப்பட்ட முயற்சி தான் உங்களை உயர்த்தும். கடந்த 1 வருடமாகதான் வீல் சேர் கிரிக்கெட் விளையாடுகிறேன். அனைவரும் என்னிடம் இது கடினமாக இருக்கும் எனக் கூறினார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் எனக் கூறினார். விளையாட்டுப் பயிற்சியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி டீன் (மாணவர்கள் பிரிவு) சத்தியநாராயணன், \\”திறமை நிகழ்ச்சியின் மூலம் எண்ணற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களின் குறைகளை களைந்து வெளியே வந்து தங்கள் திறனை வெளிப்படுத்துவார்கள்.

சென்னை ஐஐடி இந்த விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கு, வீல் சேர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க எந்தெந்த மாதிரியான கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இந்த போட்டியின் மூலம் அவர்களின் திறனைக் கண்டறிந்து, அவர்கள் அடுத்தகட்டத்திற்கு செல்ல பயிற்சியாளர்கள் உதவி செய்வார்கள். இத்தனை நபர்கள் இங்கு வந்திருப்பது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுக்கிறது. தற்போது தான் அவர்கள் வெளியே வர ஆரம்பித்து உள்ளார்கள். மற்றவர்களை போல் விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பங்கேற்பதற்காக ஆர்வமாக வருகின்றனர். இதற்காகவே அவர்களை பாராட்ட வேண்டும் எனக் கூறினார்.

The post சென்னை ஐஐடி நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறமை விளையாட்டு பயிற்சி முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article