தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் கால்வாய் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் உதவியை மாநில அரசு கோரி உள்ளது. கடந்த சனிக்கிழமை சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் 8 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 5வது நாளாக நடைபெற்று வருகின்றன. 44 மீட்டர் நீளம் கொண்ட ஸ்ரீசைலம் கால்வாய் முகப்பிலிருந்து 13.5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டது.
இந்திய ராணுவம், கடற்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் மற்றும் பிற அமைப்புகளின் குழுக்கள் இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்ட நிலையில் சுரங்கத்தின் உள்ளே தண்ணீர் இருப்பதால் அவை உள்ளே நுழைய முடியவில்லை. 8 தொழிலாளர்கள் இருக்கும் இடம் பற்றிய எந்த தடயமும் கிடைக்காத நிலையில் சுரங்கப்பாதையின் மேற்புறத்தில் இருந்து செங்குத்தாக துளையிட எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
சுரங்கப்பாதையில் மின்கசிவு காரணமாக மண்ணின் உறுதி தன்மை தளர்ந்ததில் மண் சரிவு ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் 50 மீட்டர் தொலைவுக்கு நிறைந்துள்ள சேர் மற்றும் கழிவுகளை தோண்டினால் அதில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் மட்டுமின்றி மீட்பு குழுவினருக்கும் ஆபத்தாக முடியும் என்பதால் அந்த பகுதியில் பாறை வெடிப்புகள் குறித்து தேசிய நிலஅதிர்வு மூலம் ஆய்வு நடத்த கோரி மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கடிதம் அனுப்பி உள்ளது. நிலஅதிர்வு தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளர்கள் சிக்கி உள்ள பகுதியில் எந்த அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை நீர் கசிவின் தன்மை மற்றும் அளவு குறித்தும் கண்டறிய முடியும்.
The post சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் தொடரும் சிக்கல்: நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் உதவியை நாடிய மாநில அரசு appeared first on Dinakaran.