சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…. செயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்: ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு

1 week ago 9

புதுடெல்லி: இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் பெரிய மாற்றத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பணமாகவோ அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாகவோ கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதனால் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது. அதை போக்க ‘பாஸ்டேக்’ முறை அமலுக்கு வந்தது.

அதன்பிறகும் விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் வெளியூர் செல்பவர்களால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்கி வருகின்றன.எனவே, ‘பாஸ்டேக்’ முறையுடன், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘குளோபல் நேவிகேஷன் சாட்டலைட் சிஸ்டம்’ (ஜி.என்.எஸ்.எஸ்.) என்ற பயண தூர அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை, குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தப்படும் என்று கடந்த ஜூலை மாதம் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிவிலும், அரியானா மாநிலத்தில் பானிபட்-ஹிசார் பிரிவிலும் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய முறை, நாடு முழுவதும் சில நெடுஞ்சாலைகளிலும், விரைவுச்சாலைகளிலும் நேற்று முன்தினம் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வாகனங்களில், செயற்கைக்கோள் இணைப்புக்கான ஆன்-போர்டு யூனிட் எனப்படும் சிறிய ஓ.பி.யு. கருவி வெளிப்புறத்தில் பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்பட்ட வாகனம், சுங்க கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணிக்கும்போது, நாள் ஒன்றுக்கு, முதல் 20 கி.மீ.க்கு கட்டணம் கிடையாது. அதன்பிறகு பயணிக்கும் தூரம், செயற்கைக்கோள் வழியாக கணக்கிடப்பட்டு, ‘பாஸ்டேக்’ போலவே வங்கிக்கணக்கில் இருந்து சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும். ஓ.பி.யு. கருவி வாயிலாக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயற்கைக்கோளுடன் இணைப்பு ஏற்பட்டு வாகன பயண தூரம் பின்தொடரப்படும்.

குறிப்பிட்ட தொலைவுகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளும் செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்படும். ஓ.பி.யு. சாதனம் நாளடைவில் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும்போது சுங்கச்சாவடிகள் தேவையற்றதாகி விடும். அப்போது வாகனங்கள் இடையூறின்றி பயணிக்க முடியும். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி வசிக்கும் மக்கள் தினமும் 20 கி.மீ.வரை கட்டணமின்றி சென்றுவர வாய்ப்பு ஏற்படும் என ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,

The post சுங்கச்சாவடிகளுக்கு டாட்டா…. செயற்கைகோள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்: ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article