சீவலப்பேரியில் குண்டும் குழியுமான சாலைகள் பாழடைந்த அரசு கட்டிடங்கள்

1 hour ago 3

*சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கேடிசிநகர் : சீவலப்பேரியில் குண்டும், குழியுமான பல்லாங்குழி சாலைகளையும், பாழடைந்த அரசு கட்டிடங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவலப்பேரி பஞ்சாயத்து சுமார் 6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமமாகும். இந்த பஞ்சாயத்தின் கீழ் மறுகால்தலை, பொட்டல்நகர், சந்தைப்பேட்டை, ஜான்நகர், மடத்துப்பட்டி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.

சீவலப்பேரியில் புகழ்பெற்ற துர்க்கையம்மன் கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில், சுடலை கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.மேலும் இந்த பகுதியில் ஏராளமான செங்கல்சூளைகள் உள்ளன.

இவற்றில் வடமாநிலத்தைச்சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க சீவலப்பேரியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இங்குள்ள கால்நடை மருந்தககட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து காணப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள சேவை மையத்தில் தற்போது கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. அரசு ஊரக ஆயுர்வேத மருந்தகம் பழைய ஓட்டுக்கூரை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்துவிட்டதால் ராஜவல்லிபுரத்திற்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் அவசர சிகிச்சைகளுக்கு ராஜவல்லிபுரம் செல்ல வேண்டி உள்ளது. இதேபோல் கூட்டுறவு சங்க கட்டிடமும் பாழடைந்துள்ளதால் அதுவும் ராஜவல்லிபுரத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் உரம் மற்றும் விவசாய கடன் உள்ளிட்ட தேவைகளுக்கு ராஜவல்லிபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஊரில் உள்ள சாலைகள் அனைத்தும் பழுதடைந்து குண்டும், குழியுமாக பல்லாங்குழி ரோடுகளாக காணப்படுகிறது. இவற்றை பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இங்குள்ள பயணிகள் நிழற்குடையும் சேதமடைந்துள்ளது. பஸ் திரும்பும் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பஸ்கள் அங்குள்ள பெட்ரோல் பங்க் சென்று திரும்புகின்றன.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சீவலப்பேரி பகுதிக்கு தேவையான சாலை வசதி, கால்நடை மருந்தக கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆகியவற்றையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சீவலப்பேரியில் குண்டும் குழியுமான சாலைகள் பாழடைந்த அரசு கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article