
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார். இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை அவரது வீட்டில் இருந்து வந்த நபர் ஒருவரால் கிழிக்கப்பட்டது. இந்த சம்மனை கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளர் சீமான் வீட்டு காவலாளி உள்ளே விடாமல் தடுத்துளளார்.
இதனைத்தொடர்ந்து சீமானின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போலீசாரை தாக்கியதாக வீட்டுக் காவலாளி அமல்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். காவலாளி அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்தனர். அவர் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு வீரர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீமான் வீட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பான அந்த விளக்கத்தில், "சீமான் வீட்டில் வளசரவாக்கம் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க நீலாங்கரை போலீசார் அங்கு சென்றனர். விசாரிக்க சென்ற நிலாங்கரை காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் இருந்த காவலாளி தடுத்து நிறுத்தி உள்ளார்.
காவலாளியிடம் துப்பாக்கி இருப்பதாக கூறியதால் அதை கைப்பற்ற உள்ளே செல்ல காவல் ஆய்வாளர் முற்பட்டார். காவலாளி அமல்ராஜிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் 20 தோட்டாக்கள் இருந்தது. அந்த துப்பாக்கி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. துப்பாக்கி வைத்திருக்க உரிமம் இருந்துள்ளது. காவல் ஆய்வாளர் பிரவீன் உள்ளிட்ட மூன்று போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவலாளி அமல்ராஜ் மீது பி.என்.எஸ் 109 பிரிவின்படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தாம்பரம் பகுதியில் வசித்து வரும் சீமானின் காவலாளி அமல்ராஜ் 2010-ம் ஆண்டு முதல் துப்பாக்கி வைத்து கொள்வதற்கான உரிமம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது 0.32 காலிபர் ரக துப்பாக்கியாகும். இந்த வகையான துப்பாக்கி கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த அமல்ராஜ், நாம் தமிழர் கட்சியில் இணைந்து சீமான் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்புக்காக பெறப்பட்ட துப்பாக்கியை, சட்டவிரோதமாக தொழில் ரீதியாக அவர் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.