சீமான் வீட்டில் நடந்த களேபரம்: காயமடைந்த காவல் ஆய்வாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

3 hours ago 1

சென்னை,

நடிகை பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு வளசரவாக்கம் போலீசார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் வீட்டில் சம்மன் ஓட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டது. அந்த சம்மனை கிழித்தது ஏன் என்று போலீசார் விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற போது, திடீரென அவரின் காவலாளியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சீமானின் காவலாளி போலீசாரை தாக்கியதோடு கையில் இருந்து துப்பாக்கியையும் எடுத்து நீட்டியுள்ளார். இதன்பின் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார், கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். காவலாளியின் கைகளில் இருந்த கை துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சீமான் மனைவி கயல்விழி போலீசாரிடம் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜ் வைத்திருந்த துப்பாக்கி பாயிண்ட் 3 கைத்துப்பாக்கி வகையை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. அமல்ராஜிடமிருந்து துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சீமானின் காவலாளியாக பணியாற்றி வரும் அமல்ராஜ் முன்னாள் ராணுவ வீரர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் அவரின் துப்பாக்கி உரிமம் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமான் வீட்டின் காவலாளி அமல்ராஜ் தாக்கியதில் காயமடைந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேசுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலின் பல இடங்களில் நகக்கீறல் காயங்கள் இருப்பதால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே சீமான் வீட்டில் காவலாளி மற்றும் உதவியாளர் காவலர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் தரப்பில் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் புகார் அளித்தநிலையில், உடனிருந்த காவலர்கள் தங்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட மற்றொரு புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் காரணமாக சீமானின் வீடு உள்ள பகுதியில் ஏராளமான நா.த.க. நிர்வாகிகள் வர தொடங்கி உள்ளனர். மேலும், சீமான் வீட்டை சுற்றி ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள பகுதி பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது.

Read Entire Article