
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தினனர். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயலட்சுமியுடன் நேரில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும்வகையில் நடிகை விஜயலட்சுமி விடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த விடியோவில், "சீமான் மீது வழக்கு தொடர தி.மு.க.வினர்தான் என்னை அழைத்து வந்தனர் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் கூறினார். என்னை யாரென்று தெரியாது என்று கூறியதுடன், காங்கிரசார்தான் என்னை அழைத்து வந்ததாகக் கூறினார். மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்தபோது, என்னை பா.ஜ.க.வினர்தான் இயக்குவதாகக் கூறினார்.
2023-ல் மதுரை செல்வத்துடன் என்னிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள சீமான் வந்தார். மேலும், அவரைப் பற்றி வெளியில் பேசவேண்டாம் என்று கூறியதுடன் மாதந்தோறும் ரூ. 50,000 பணமும் அனுப்பினார். என்னிடமிருந்த விடியோக்களையும் பெற்றுக் கொண்டார். என்னை பொண்டாட்டி.. பொண்டாட்டி.. பொண்டாட்டி.. என்று அவர் அழைத்த விடியோக்களையும் போலீசாரின் மூலம் கோர்ட்டில் சமர்ப்பித்ததால்தான், சீமானுடைய முதல் மனைவி விஜயலட்சுமியா என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
இந்த மாதிரியான கேவலமான வேலைகளில் ஈடுபடுமாறு உங்களிடம் தி.மு.க. சொல்லவில்லை. பின்னர் ஏன் தி.மு.க.வை வம்பிழுக்கிறீர்கள்? என்னுடன் நேருக்குநேர் பேச அழைப்பு விடுத்துள்ளீர்கள். நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேள்வி கேட்பதற்காகவே நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
இரண்டு நாள்களுக்கு முன்பாகக்கூட, என்னுடன் சமாதானப் பேச்சுக்கு ஆள்களை அனுப்பினார். என்னுடைய பாவம் உங்களை எப்படியெல்லாம் படுத்தப்போகிறது என்று பாருங்கள்" என்று அதில் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.