சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு: நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் போலீசார் விசாரணை

3 hours ago 1

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை 2012-ம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி, நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தினனர். சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருப்பதால் சீமான், போலீஸ் அனுப்பிய சம்மனை ஏற்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது கேள்விக்குறியாகியாக இருந்தது.

இந்த நிலையில், நடிகை அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சீமான் இன்று ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அங்கு சென்றதால் ஆஜராகவில்லை. வளசரவாக்கம் போலீசாரிடம் உரிய விளக்கம் அளிக்க சீமானின் வழக்கறிஞர்கள் குழு செல்கிறது.

Read Entire Article