சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் 1,200 ஆண்டு கால பழமையான ஈமச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும்; தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை

2 hours ago 2

சிவகங்கை: சிவகங்கை அருகே அலவாக்கோட்டை எல்லையில் 1,200 ஆண்டு கால பழமையான ஈமச்சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாத்து இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் கூறியதாவது:அலவாக்கோட்டை, கீழப்பூங்குடி செல்லும் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தில் 100க்கு மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டம் காணப்படுகிறது. கல் வட்டம் என்பது பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒரு வகையாகும். சவக்குழியின் மேற்பகுதி அடைக்கப்பட்டு சிறியதும் பெரியதுமான கற்கள் வட்டமாக அடுக்கப்படும்.

நடுவில் கருப்பு சிவப்பு மண் பானையில் இறந்தவர் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இறந்தோர் நினைவாக பெருங்கற்களைக் கொண்டு கல்லறை எழுப்பி அதை வணங்கும் வழக்கம் தென்னிந்தியாவில் கிமு.1000 ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்துள்ளது. சமணர்களே இந்தமுறையில் அடக்கம் செய்யும் பழக்கங்களை கொண்டிருந்தனர்.
ஆனால் எந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது என இதுவரை தெரியவில்லை. பெருங்கற்காலத்தை இரும்பு காலம் என அழைப்பர். இரும்பு காலம் ஏறக்குறைய கிமு.1000 முதல் கிபி.500 வரை என இங்கிலாந்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் மார்டிமர்வீலர் தெரிவித்துள்ளார்.

இங்கு வட்டவடிவ அமைப்பில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் முதுமக்கள் தாழி கற்கள் வெள்ளை நிறக்கற்களாக உள்ளதாலும் மிக நீண்ட பரப்பளவில் காணப்படுவதால் பொட்டலாகவும் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த கல் வட்டங்களை வெள்ளக்கல் பொட்டல் என்று அழைக்கின்றனர். இந்த கல் வட்டங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. கால்நடை மேய்ப்பவர்களால் ஒரு சில கல் வட்டத்தில் உள்ள பானைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தனியார் சிலர் பானைகளில் உள்ளே ஏதேனும் பொருட்கள் உள்ளதா என அவற்றை உடைக்கின்றனர். பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. தமிழக தொல்லியல் துறை இதை பாதுகாத்து இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும், என்றனர்.

The post சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் 1,200 ஆண்டு கால பழமையான ஈமச்சின்னங்களை பாதுகாக்க வேண்டும்; தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article