சிறந்த கைத்தறி நெசவாளர், வடிவமைப்பாளர்களுக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2 hours ago 2

சென்னை,

மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகள், சிறந்த வடிவமைப்பாளர் விருதுகள் மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 விருதாளர்களுக்கு ரூ.22.65 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.09.2024) தலைமைச் செயலகத்தில், 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 விருதாளர்களுக்கு பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், போட்டி தேர்வு மூலம் சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

2023-2024-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சந்திரசேகரனுக்கும், 2-ம் பரிசினை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.டி.குமரேசனுக்கும், 3-ம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ்.புகழேந்திக்கும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசினை பரமக்குடி, அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பிரேமாவுக்கும், 2-ம் பரிசினை பரமக்குடி, லோகமான்ய திலகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.எஸ்.அலமேலுவுக்கும், 3-ம் பரிசினை கோயம்புத்தூர், வதம்பச்சேரி ஸ்ரீ நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் டி.மகாலெட்சுமிக்கும் முதல்-அமைச்சர் வழங்கி கவுரவித்தார்.

மாநில அளவிலான சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை, காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எஸ். குமரவேலுக்கும், 2-ம் பரிசினை காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் வடிவமைப்பாளர் டி.பார்த்திபனுக்கும், 3-ம் பரிசினை தந்தை பெரியார் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எம்.கமலவேணிக்கும் வழங்கி முதல்-அமைச்சர் சிறப்பித்தார்.

9 விருதாளர்களுக்கு 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மாநில அளவிலான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசினை கரூர், வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நவநாகரிக தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு இளநிலை அறிவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி கே.தர்ஷணாவுக்கும், 2-ம் பரிசினை மதுரையை சேர்ந்த ந.சங்கர், சுயசார்பு வடிவமைப்பாளருக்கும், 3-ம் பரிசினை கோயம்புத்தூர், பி.எஸ்,ஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆடை அலங்கார வடிவமைப்பில் இளங்கலை தொழில்நுட்பவியல் துறையில் முதலாமாண்டு பயிலும் மாணவி பி.ரா.ஹரிணிக்கும் என 3 விருதாளர்களுக்கு 2.25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதல்-அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித்துறை இயக்குநர் அ.சண்முக சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article