
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். இதில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள்.
சித்ரா பவுர்ணமி
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு சுமார் 8.53 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி கார்த்திகை தீபத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளை அடிப்படையாக கொண்டு சித்ரா பவுர்ணமிக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலிலேயே திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் வருகை தர தொடங்கினர். பின்னர் பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பக்தர்களின் வசதிக்காக கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக வந்த பக்தர்களிடையே அவ்வப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதனை சரி செய்து வரிசையில் பக்தர்களை அனுப்பினர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர். நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட் படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்திற்குள் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு என்று ஆங்காங்கே மின்விசிறிகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில இடங்களில் ஏர் கூலர்கள் வைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி சாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தின் அருகில் ராட்சத மின்விசிறி வைக்கப்பட்டு இருந்தது.
வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர், தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் பாக்கெட், கடலை உருண்டை போன்றவை வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கடலை உருண்டை வழங்கும் பணியை கோவில் இணை ஆணையர் பரணிதரன் தொடங்கி வைத்தார். மேலும் முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விரைந்து சாமி தரிசனம் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விடிய, விடிய கிரிவலம்
சித்ரா பவுர்ணமி இரவில் தொடங்கியதால் நேற்று பகலில் கிரிவலம் செல்லும் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பகல் நேரத்தில் சிலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர். மாலைக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கிரிவலப்பாதையில் காணும் இடமெல்லாம் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் வாங்கி சாப்பிட்டனர். நேற்று இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போக்குவரத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் முக்கிய பிரகாரங்கள், கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். கோவிலின் வளாகத்திற்குள் மட்டுமின்றி கிரிவலப்பாதையிலும் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசலை மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நகரையொட்டி வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 108 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் கிரிவலப்பாதையின் முக்கிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கார், வேன் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.