சித்தத்தைச் சீராக்கும் சீரிய நாமம்

17 hours ago 2

பண்ட சைந்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா

சென்ற நாமத்தின் தொடர்ச்சி…

இப்போது இந்த விருப்பு, வெறுப்புகள் என்ன ஆகின்றது எனில், ஒரு refined state என்கிற நிலைக்குப் போகும்போது, அந்த அஞ்ஞான விருத்தியிலிருந்த விருப்பு வெறுப்பெல்லாம் அப்படியே ஞான விருத்தியாக மாறும்போது, ஆத்ம விருத்தியாக மாறும்போது, சிதானந்தர் என்கிற மகானின் வார்த்தையில் சொல்வதானால், ஆத்ம கோசர விருத்தியாக மாறும்போது இந்த விருப்பு வெறுப்பெல்லாம் refined stateக்கு போகின்றது. இங்கு கீழான நிலையில் இருந்த விருப்பு, வெறுப்பெல்லாம்… இங்கே refined stateல் எப்படி இருக்குமெனில், வாராஹியாகவும் மாதங்கியாகவும் இருக்கும். அந்தப் பக்கம் அஞ்ஞான மயமான பண்டாசுரன் இருக்கிறானெனில், இந்தப் பக்கம் ஞான மயமான அம்பாள் இருக்கிறாள். அந்தப் பக்கம் plurality என்று சொல்லக் கூடிய சைன்னியம் இருக்கிறது. அவன் எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்து வைத்துக் கொண்டிருந்தான். இந்தப் பக்கம் அம்பாள் எல்லாவற்றையும் சேர்த்து சேர்த்து தன்னுடைய சைன்னியதை உருவாக்கியிருக்கிறாள். அம்பிகையினுடைய சைன்னியத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தேவதையும் சாட்சாத் அம்பிகையேதான். அம்பாளினுடைய சொரூபமாகத்தான் ஒவ்வொரு தேவதையும் இருக்கிறது.

இங்குதான் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அங்கு அஞ்ஞானம் ஒரு விஷயத்தை பலவாகப் பிரித்துக் காண்பிக்கின்றது. இங்கு அம்பாளின் சைன்னியத்தில் அதாவது மேலே சொல்லப்பட்ட இத்தனை தேவதைகளும் யாரென்று பார்த்தால், சாட்சாத் லலிதா திரிபுரசுந்தரியினுடைய சொரூபம். ஒவ்வொருவரும் தனித்தனியாக லலிதா திரிபுரசுந்தரியிலிருந்துதான் ஆவிர்பவித்திருக்கிறார்கள். அங்கு எல்லாமே அம்பிகையினுடைய சொரூபமாக இருப்பதனால், எல்லாவற்றையும் சேர்த்து தன்னுடைய சொரூபமாகவே பார்க்கக் கூடியது ஞானம். எல்லாவற்றையும் பிரித்துப்பார்த்து பார்க்கக் கூடியது அஞ்ஞானம்.

இந்த pluralityக்கும் singularity க்கும் நடக்கக்கூடிய யுத்தமாகத்தான் இது இருக்கிறது. எப்போதுமே singularity யானது plurality ஐ வதம் செய்து விடும். அத்வைத பாவத்திற்கு முன்னால், ஞானத்திற்கு முன்னால் அஞ்ஞானம் நிற்க முடியாது. இங்கு அஞ்ஞான சைன்னியமான பண்ட சைன்னியமானது ஞான மயமான சக்தி சைன்னியத்தால் வதம் செய்யப்படுகின்றது. அப்படி வதம் பண்ணும்போது அம்பிகை என்ன செய்கிறாளெனில் ஹரிஷிதா என்று சந்தோஷப்படுகின்றாள். அந்த சந்தோஷம் நமக்கு எதைக் காண்பித்துக் கொடுக்கிறதெனில், இந்த சாதகனுக்குள் ஏற்படக்கூடிய அஞ்ஞான விருத்தியிருக்கிறதல்லவா…. இது குருவின் அனுக்கிரகத்தால் சிதறடிக்கப்படுகின்றது. குருவின் அருளால் உபாசனா வழியில் சென்று அத்யாத்ம சாதனையில் செல்லும்போது அவனுக்குள் ஏற்படக் கூடிய சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றம் வந்தபடி இருக்கும்.

குருவை சேவித்து வணங்குதல் , பூஜை செய்வது, சத்சங்கத்தில் கலந்துகொள்வது, ஒரு நாம சங்கீர்த்தனம், கோயிலுக்குச் செல்வது, ஒரு பாராயணத்தில் கலந்து கொள்வது , ஞான மயமான ஒரு விஷயத்தைக் கேட்பது என்று இவை ஒவ்வொன்றும் ஞான ஸ்பூர்த்தியை கொண்டு வரும். இந்த ஒவ்வொன்றும் நம்மை ஆத்ம ஞானத்தை நோக்கி கொண்டு போகும். அத்வைதத்தை நோக்கி கொண்டுபோகும். அப்படி செல்லும்போது இந்த சாதகனுக்குள் இருக்கிறதல்லவா plurality அதாவது அஞ்ஞானமானது கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகின்றது. அந்த அஞ்ஞான விருத்தி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதுதான் பண்ட சைன்னிய வதோத்யுக்த…. அதை யார் செய்கிறாள் எனில், சக்தி விகரம… பராக்கிரமம் மிகுந்த இந்த சக்தி சைன்னியம் செய்கிறது. இந்த சாதகனுடைய ஞான விருத்தி அதைச் செய்கிறது. அப்படி பண்ணும்போது அம்பிகை… ஹர்ஷிதா… சந்தோஷிக்கிறாள்.

பராக்கிரமம் மிகுந்த இந்த சக்தி சைன்னியமான, ஞான மயமான சைன்னியம் அஞ்ஞான விருத்திகளை அழிக்கும்போது அம்பாள் சந்தோஷப்படுகிறாள் அல்லவா… அந்த சந்தோஷம் எதுவெனில் இந்த சாதகன் அவனுக்குள் அனுபவிக்கின்ற ஆத்மானந்தம்தான் அந்த சந்தோஷம். இதுதான் இந்த நாமத்தின் மையமாகும். அப்போது நாம் அனுபவிக்கும் சந்தோஷமெல்லாம் தற்காலிகமானதுதான். பண்டாசுரன் அளிக்கும் சிறுசிறு அற்ப, சிற்றின்பமே ஆகும். ஆனால், அம்பாளின் சந்தோஷம் என்பது பேரானந்தமாகும். இப்படி அம்பாள் அனுபவிக்கும் சந்தோஷத்தைத்தான், பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் சூத்திரத்திலேயே யோக சித்த விருத்தி நிரோதஹா… என்று காண்பித்துக் கொடுக்கிறது. சித்த விருத்திகளை நிரோதம் செய்வதுதான் நிரோதமாகும். இங்கு பண்டனுடைய சைன்னியத்தை அம்பாள் தன்னுடைய ஞானமயமான சக்தி சைன்னியத்தால் நிரோதம் செய்கிறாள். அப்படிச் செய்யும்போது இவனுக்குள் யோகம் சித்திக்கின்றது. ஞானம் சித்திக்கின்றது. ஆனந்தம் சித்திக்கின்றது.

இந்த நாமத்திற்கான கோயிலாக நாம் சிக்கல் சிங்கார வேலன் கோயிலைச் சொல்லலாம். ஏனெனில், ஞான மயமான முருகப் பெருமானுக்கு அம்பாள் ஞான மயமான வேலை அளிக்கிறாள். அந்த ஞான மயமான வேலை வாங்கி சூர பத்மாதி சைன்னியங்களை முருகப் பெருமான் அழிக்கிறார். அங்கு அம்பாள் சத்யாயதாட்சி என்று அழைக்கப்படுகின்றாள். வேல்நெடுங்கண்ணி என்று அம்பாள் அழைக்கப்படுகின்றாள். அவளுடைய கண்ணே அங்கு வேலாக இருக்கிறது. ஞான மயமான கண்களில் இருந்து, ஞானமயமான வேலை உண்டாக்கி ஞான மயமான புத்திரனிடம் கொடுத்து அஞ்ஞான சைன்னியத்தை சம்ஹாரம் செய்கிறாள். இன்றும் அப்படி வேல் கொடுக்கும் நிகழ்வின்போது முருகப் பெருமானுக்கு வியர்த்துக் கொட்டும். அந்த சிக்கல் சிங்கார வேலனின் விக்ரகத்தில் வியர்வைத் துளிகள் பொங்கிப் பொங்கி வருவதும் அதை சிவாச்சார்யார்கள் துடைத்துக் கொண்டே இருப்பார்கள். இத்தலத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு நவநீதேஸ்வரர் என்று பெயர். இத்தலம் திருவாரூருக்கு அருகே அமைந்துள்ளது.

(சுழலும்)

The post சித்தத்தைச் சீராக்கும் சீரிய நாமம் appeared first on Dinakaran.

Read Entire Article