*சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கேடிசிநகர் : நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் சாலைகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. நெல்லை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. நெல்லை டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து சுவாமி நெல்லையப்பர் கோயில் வரை சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதுபோல் புறநகர் நான்குவழிச்சாலையிலும் ஒரு சில இடங்களில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது.
நெல்லை தாழையூத்து மாடர்ன் ரைஸ்மில் பகுதியில் இருந்து தச்சநல்லூர் வரையிலான நான்கு வழிச்சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகள் (மேனுவல்) சாலை மட்டத்தைவிட சுமார் அரைஅடி உயரத்தில் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகள் அமைந்துள்ள பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளமான சாலையை கடக்கும்போது பின்னால் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகின்றது. எனவே தாழையூத்து மாடர்ன் ரைஸ்மில் பகுதியில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post சிதிலமடைந்த தாழையூத்து-தச்சநல்லூர் சாலையால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.