சாலையின் இருபுறமும் மலைபோல் குவிந்து கிடக்கும் கற்கள், மணல் பருவ மழைக்கு முன்பு முடியுமா இசிஆர் விரிவாக்க பணி? விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

4 hours ago 3

சென்னை: சென்னை மாநகரில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலையை தொடர்ந்து, முக்கிய சாலைகளாக ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகள் உள்ளன. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, சென்னையில் இருந்து 60 கி.மீ., தூரத்தில் உள்ள மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் துாத்துக்குடி வழியாக கன்னியாகுமரி உடன் இணைக்கும் முக்கிய சாலையாக (மா.நெ.49) இசிஆர் உள்ளது.

சென்னையில் இருந்து இசிஆர் சாலைக்கு செல்ல வேண்டுமானால் திருவான்மியூர் தான் இசிஆர் சாலையின் நுழைவுப் பகுதியாக உள்ளது. இங்கு சாலை மிக குறுகியதாக உள்ளதால் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையை கடப்பது வாகன ஓட்டிகளுக்கு ஒரு சவாலாக உள்ளது. எனவே இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தற்போது இசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ., தூரம் கொண்டது. இடத்தை பொறுத்து, 60 முதல் 80 அடி வரை அகலத்தில், நான்கு வழிச் சாலையாக உள்ளது. மேலும் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.

எனவே, சாலையை கடக்க வழக்கமாக சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. நாளொன்றுக்கு 69,000 வாகனங்கள் செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும்.
கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் சாலை விரிவாக்க அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2012ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல்கட்ட நிலம் எடுப்பு பணிக்காக ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இசிஆர் விரிவாக்க பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், சாலைகளின் கீழ் இருபுறமும் மீண்டும் தோண்டாதவாறு குடிநீர் வாரியம், மின் வாரியம், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பணிகள் இருந்தால் அவற்றை உடனடியாக செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மழைநீர் வடிகால் பணி, மின்மாற்றிகள் அமைக்கும் பணி, அதற்காக மின் கேபிள்கள் புதைக்கும் பணி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலையின் இருபுறமும் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் அப்படியே கிடக்கிறது. மேலும் சாலையின் இருபுறமும் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. சாலையில் இருந்து தெருக்களுக்கும், தெருவில் இருந்து சாலைகளுக்கும் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. விரிவாக்கம் நடக்கும் இடத்தில் ஏற்கனவே இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை இன்னும் அகற்றப்படவில்லை. மற்றொருபுறம், வாகனங்கள் செல்லும்போது புழுதி மண் பறந்து கண்களை பதம் பார்க்கிறது. மழை பெய்தால் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.

ஏற்கனவே, இசிஆர் சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் நிலையில், விரிவாக்க பணியால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் அரைகுறையுமாக மூடப்பட்டுள்ளது. கற்குவியல்களுடன் காணப்படும் பள்ளங்கள் அருகே பெயருக்கு சில தடுப்புகள் மட்டும் வைத்துள்ளனர். இசிஆர் சாலையில் இரவில் வரும் வாகனங்களுக்கு பள்ளங்கள் எமனாக மாறி வருகிறது. சாலை விரிவாக்க பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. மழைநீர் வடிகால் பணிகள் பல இடங்களில் இணைப்புகள் இல்லாமல் தோண்டப்பட்ட நிலையில் உள்ளது. அங்கு பாதுகாப்புக்காக தடுப்புகளோ, அறிவிப்பு பலகைகளோ எதுவும் கிடையாது.

தற்போது 6 வழிச்சாலைக்கு ஏற்றவாறு இசிஆர் சாலையில் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, சாலையின் நடுவே தோண்டப்பட்டு குழி போன்று உள்ளது. சில இடங்களில் கற்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதுவும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதுபோல பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு மேன்ஹோல்கள் அமைக்கும் பணி நடக்கிறது. அந்த பகுதகிளில் இன்னும் பள்ளங்கள் மூடப்படவில்லை. அதை சுற்றி தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் ரிப்பன் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இதை கவனிக்காமல் வந்தால் நேராக குழிக்குள்தான் விழ வேண்டும் என்ற நிலையே தற்போது நிலவுகிறது.

மேலும், சாலை ஓரங்களில் ராட்சத குழாய்கள் குவிக்கப்பட்டுள்ளது. கொட்டிவாக்கத்தில் 270 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இப்போதே நிலைமை இப்படி இருக்கும்போது, மழை வெளுத்து வாங்கினால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. எனவே, பருவ மழை தொடங்கும் முன்பாக பாதாள சாக்கடை, மின் கேபிள் புதைக்கும் பணி, மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் பருவ மழையின்போது சாலை, தெருக்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க முடியும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இசிஆர் சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகள் நடந்து வருகிறது. முன்பை விட, வாகனங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன. பல நேரம், சாலையைக் கடக்க முடியாத அளவுக்கு நெரிசல் உள்ளது. 5 ஆண்டுகளில் பணி முடிக்க வேண்டிய திட்டம். பல்வேறு காரணங்களால் ஒரு கி.மீ., தூரம் வரைகூட பணி முழுமை பெறவில்லை. இந்நிலையில் அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறியிருப்பது இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அதேபோல், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை மேம்பாலம் அமைக்கப்படும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் 6 வழிச்சாலையை விரிவாக்கம் செய்யும் பணியுடன் மேம்பாலத்திற்கான பணிகளுக்கான திட்டத்தை வகுத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏற்கனவே சாலையின் இருபுறங்களிலும் நிலம் கையெடுப்பு முடிந்துவிட்டது. மேலும் நிலங்கள் கையப்படுத்துதல் இன்றி உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்கு மையப்பகுதியில் அமைக்கப்படும் சாலை தடுப்புகள் இடையே தூண்கள் அமைத்து பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவேளையில் தற்போது சாலையை மையப் பகுதியில் தான் மின்விளக்கு கம்பங்கள், சில மின்சார கம்பிகள் செல்கிறது. இந்த பணிக்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமான திட்டத்துடன், விரிவாக்க பணியை ஒப்பிட்டு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* வாகன ஓட்டிகள் அச்சம்
இசிஆர் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘சாலை பணிகளால் இருபுறமும் மண் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிர்பாராத விபத்துகளை சந்திக்கின்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ராட்சத பள்ளங்களில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனோ தானோ என்று பணிகள் நடப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த பணிகளை முறையாக கையாள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக, இசிஆர் சாலையில் கடைகள் அதிகம் உள்ளது. வாடிக்கையாளர்கள் வாகனங்களை கடைகளின் முன்பு நிறுத்துவதற்கு இடங்கள் எதுவும் இல்லை. எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றனர்.

* மொத்தமுள்ள 16.57 கி.மீ (இருபுறமும்) நீளத்தில் 5.125 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 11.445 கி.மீ. நீளத்தில், 2.751 கீ.மி நில எடுப்பு பணிகள் காரணமாகவும், 7.231 கி.மீ. மின்பெட்டிகள் மற்றும் புதை மின்வடங்கள் மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக பாதாள சாக்கடை பணிகள் நிலவையில் உள்ளது. மீதமுள்ள 1.463 கி.மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் வரும் 30ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* கொட்டிவாக்கத்தில் 1870 மீ மொத்த நீளத்தில் 1599 மீ நீளத்திற்கு குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 270 மீ நீளத்தில் 136 நில எடுப்பு பணிகள் காரணமாகவும் 134 மீ. மின்பெட்டிகள் மற்றும் புதை மின்வடங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் காரணமாகவும் பாதாள சாக்கடை பணிகள் நிலுவையில் உள்ளது.

* ஒவ்வொரு 200 மீ. நீளத்திற்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதுவரை 5125 மீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முடிக்கப்பட்ட குழாய் பதிக்கும் பணிகளின் விவரங்கள் :
கொட்டிவாக்கம் 1600 மீட்டர்
பாலவாக்கம் 1790 மீட்டர்
நீலாங்கரை 294 மீட்டர்
ஈஞ்சம்பாக்கம் 780 மீட்டர்
சோழிங்கநல்லூர் 661 மீட்டர்

The post சாலையின் இருபுறமும் மலைபோல் குவிந்து கிடக்கும் கற்கள், மணல் பருவ மழைக்கு முன்பு முடியுமா இசிஆர் விரிவாக்க பணி? விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article