
சென்னை,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சிக்கந்தர்' படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
சஞ்சய் திப்பாதி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பின்னி அண்ட் பேமிலி'. இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சினி. இவர் நடிகர் வருண் தவானின் உறவினரும் கூட. நடிகை அஞ்சினி 'சிக்கந்தர்' படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் 'சிக்கந்தர்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் சல்மான் கான் ஆக்சன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார். மேலும் நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் அமைச்சராக நடித்துள்ளார். இந்த டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.