சங்ககிரி நகராட்சி பகுதியில் வெறிநாய் கடித்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதி: 2 மணி நேரத்தில் வெறிநாய் பிடிப்பு

2 days ago 4

சங்ககிரி, மே 12: சங்ககிரி நகராட்சி பகுதியில், வெறிநாய் கடித்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடித்த வெறிநாயை 2 மணி நேரத்தில் பிடித்து நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார். சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்கு உட்பட்ட டிபி.ரோடு, தீரன் சின்னமலை நகர், கிரிகாலனி, மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவற்றிற்கு உணவு கிடைக்காததால் வீட்டு வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு ஆகியவற்றை பிடித்து கடித்து வருகின்றன.

அதை விரட்டும் மக்கள், நாய் கடிக்கு ஆளாகின்றனர். அதேபோல் நேற்று காலை 11 மணியளவில் வெறிநாய் ஒன்று டிபி ரோடு, மத்தாளிகாடு, பழைய எடப்பாடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோரை கழுத்து, கை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து கடித்து குதறி சென்றது. காயமடைந்த அனைவரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தலைமை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமையிலான டாக்டர்கள், சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து சங்ககிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சரவணகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நகராட்சி ஆணையாளர் சிவரஞ்சனி, ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி முருகன், துணைத்தலைவர் அருண் பிரபு, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் உடனடியாக வெறி நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவ அலுவலர் சரவணகுமார் கூறுகையில், ‘காயம்பட்டவர்களுக்கு உடனடியாக நாய்க்கடி ஊசி மற்றும் காயம் அடைந்த இடத்தில் தடுப்பு ஊசி போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சிவரஞ்சனி உத்தரவின் பேரில், 2 மணி நேரத்தில் வெறி நாயை பிடித்து பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். இதனையடுத்து, சங்ககிரி நகராட்சி சார்பில் வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் வெறிநாய் கடிக்கு பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post சங்ககிரி நகராட்சி பகுதியில் வெறிநாய் கடித்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதி: 2 மணி நேரத்தில் வெறிநாய் பிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article