
சென்னை,
சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இப்புதிய மருத்துவமனையில் உள்ள மொத்த 6 தளங்களில் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவுகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, நவீன இரத்த வங்கியும், இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இதயவியல் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, தோல்நோய் சிகிச்சைப் பிரிவு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு முதலான பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்-மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
வடசென்னை மக்களின் உயிர்காக்கும் மருத்துவமனையாக காலாகாலத்துக்கும் செயல்பட உள்ளது கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை! அதுவும் என் பிறந்தநாளையொட்டி இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு.
மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்! பொதுமக்கள் இது உங்கள் மருத்துவமனை என உணர்ந்து தூய்மையைப் பேணுங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.