கொல்லிமலையில் விபத்துகளை தடுக்க மலைப்பாதையில் ரப்பர் உருளை தடுப்பான்கள்: ரூ10 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது

1 week ago 13

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில், சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வரும் கொல்லிமலை, கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்டுள்ளது. அடிவாரம் காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டு, மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் குறுகலான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த சாலை வளைவுகளில், விபத்து ஏற்படாமல் இருக்க தடுப்புச் சுவர்கள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், கொல்லிமலையில் சுமார் 1500 மீட்டர் தொலைவிற்கு, ரப்பர் மூலம் உருவாக்கப்பட்ட உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்க ₹10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொண்டை ஊசி வளைவு சாலை ஓரம், தடுப்பு சுவர் அமைக்க 2 அல்லது 3 மீ. அகல இடவசதி வேண்டும். இரும்பினால் ஆன தடுப்புகளில், வாகனங்கள் மோதினால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு வெளிநாட்டு தொழில் நுட்பத்தில், உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. கொல்லிமலையில் ₹10 கோடி செலவில், விபத்து தடுப்பான்கள் அமைக்க முடிவு செய்து, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கவுள்ளது. இந்த தடுப்பான்கள் அமைத்து விட்டால், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும். சிறிய அளவிலான விபத்துகளில், தடுப்பான்கள் சேதம் அடைவதில்லை. பெரிய அளவிலான விபத்துகளில் தடுப்பான்கள் சேதமடைந்தால் அதனை மாற்றிக் கொள்ளலாம்,’ என்றனர்.

The post கொல்லிமலையில் விபத்துகளை தடுக்க மலைப்பாதையில் ரப்பர் உருளை தடுப்பான்கள்: ரூ10 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article