
மும்பை,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இந்த தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் நாளைக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணியில் வருண் சக்கரவத்தி சேர்க்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் யார்..? சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட வேண்டும் என்பது குறித்து இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வருண் அதிகமாக பவுலிங் செய்கிறார். மறுபுறம் குல்தீப் யாதவிடம் வெரைட்டி மற்றும் விக்கெட் எடுக்கும் திறன் இருக்கிறது. அனைத்தையும் விட பெரிய தொடர்களில் அவர் முக்கிய நேரங்களில் உயர்ந்து நிற்கக் கூடியவர்.
2019 உலகக் கோப்பையில் பாபர் அசாமை அவர் கிளீன் போல்டாக்கியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த வகையில் அவரிடம் வித்தியாசமான திறன் இருக்கிறது. குல்தீப் பெரிய போட்டிகளில் அசத்துவதற்கான பெரிய அனுபவத்தைத் தன்னிடம் வைத்துள்ளார். எனவே குல்தீப் யாதவ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.