குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு ஜிஎஸ்டி, சுங்க சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

4 hours ago 2

புதுடெல்லி: குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (சிஆர்பிசி) கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சில பாதுகாப்புகள், ஜிஎஸ்டி சட்டம் மற்றும் சுங்க சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சுங்க சட்டம், கலால் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் உள்ள தண்டனை விதிகளை எதிர்த்து மொத்தம் 279 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம்.திரிவேதி அமர்வு விசாரித்து வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த தண்டனை விதிகள் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகிய இரண்டிற்கும் பொருந்தாது’ என்றார்.

ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘சில மனுக்களில் உள்ள சாராம்சங்கள் என்பது முக்கிய பிரச்னைகளுக்கு நேரடியாக பொருந்தவில்லை’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்ள தொடர்பில்லாத விஷயங்களை பட்டியலிட்டு சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பேலா எம்.திரிவேதி வழங்கிய தீர்ப்பில், ‘குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (சிஆர்பிசி) கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சில பாதுகாப்புகள், ஜிஎஸ்டி சட்டம் மற்றும் சுங்க சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சமமாக பொருந்தும்.

ஒரு குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு தண்டனை பெற்ற அல்லது விடுவிக்கப்பட்ட ஒருவரை அதே குற்றத்திற்காக மீண்டும் விசாரிக்க முடியாது. ஜிஎஸ்டி அதிகாரிகள் முன் அளிக்கப்படும் அறிக்கைகள் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் ஜிஎஸ்டி கைதுகளுக்கு வெறும் சந்தேகம் மட்டும் போதாது. அதற்கு சரிபார்க்கக்கூடிய ஆவணங்கள் தேவை. எனவே ஒவ்வொரு ஜிஎஸ்டி வழக்கிலும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக சுங்கச் சட்டம், ஒன்றிய கலால் வரிச்சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. எனவே ஜிஎஸ்டி சட்டம் மற்றும் சுங்கச் சட்டத்தின் தண்டனை விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 279 மனுக்களின் விசாரணைகளின் தொகுப்பினை அடிப்படையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர்.

The post குற்றவியல் நடைமுறை சட்டத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு ஜிஎஸ்டி, சுங்க சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article