குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்

1 hour ago 1

தாம்பரம்: நுரையீரல் மற்றும் இதய ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை வளாகத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவர்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரேலா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி, மருத்துவ இயக்குனர் கவுதமன், இதய அறிவியல் மையத்தின் இயக்குனர் மற்றும் முதுநிலை மருத்துவர் ஸ்ரீநாத் விஜயசேகரன், நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை துறையின் கிளினிக்கல் லீட் மருத்துவர் ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் கலந்துகொண்டு வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் தலைமை செயல்அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது: உலகளவில் நோய் பாதிப்பு நிலை மற்றும் உயிரிழப்பிற்கு முன்னணி காரணங்களாக இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் இருப்பதால், இவைகளின் ஆரோக்கியம் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்கள் உருவாவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக சுற்றுச்சூழலும், வாழ்க்கைமுறையும் இருப்பதால், தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். நாளை (29ம் தேதி) இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கான ஒரு இலவச மருத்துவ முகாமை ரேலா மருத்துவமனை நடத்துகிறது. இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான பாதிப்பு நிலைகளுக்கான அறிகுறிகள் இருக்கின்ற நபர்கள் இதய ஆரோக்கிய முகாமில் பங்கேற்கலாம்.

வேகமான இதய துடிப்புகள், சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல், மார்பு அல்லது மேற்புற உடற்பகுதியில் வலி, நெஞ்செரிச்சல் மற்றும் கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கிறவர்களுக்கு முகாம் பயனுள்ளதாக இருக்கும். இசிஜி, எக்கோ ஸ்க்ரீனிங் மற்றும் இதயவியல் மருத்துவருடன் கலந்தாலோசனை வழங்கப்படும். இலவச பரிசோதனை முகாமில் பங்கேற்பதற்கான பதிவை செய்ய 86106 82479 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article