குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் – ஊட்டி சாலையில் தூய்மை படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சம் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.
அங்கு நிலவும் ரம்மியமான காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் பல்லாயிர காணக்கான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருகை புரிகின்றனர். இது போன்று நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்து அவைகளை வனங்களிலும், சாலையோரங்களில் மற்றும் சுற்றுலா தலங்களிலும் வீசிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பிளாஸ்டிக்கை தவிர்க்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அதேபோல், கடந்த 2019ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு குறைந்துள்ளது. எனினும், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் உணவு மற்றும் பல்வேறு பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர்.
பின்னர், அந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை சாலையோரங்களிலும் வனப்பகுதிகளிலும் வீசிச் செல்கின்றனர். இவ்வாறு வீசி செல்லும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளும் விலங்குகள் உணவு குழாயில் சென்று பிளாஸ்டிக் அடைத்துக் கொள்வதால் உயிரிழந்து வருகின்றன. மேலும், மாவட்டத்தில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் – ஊட்டி சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது.
இந்த சாலையோரங்களில் சில சுற்றுலாப் பயணிகள், வாகனங்களை நிறுத்தி உணவு பொருட்களை உட்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் வாங்கி வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகளை சாலையோரங்களில் வீசிச்செல்வதால் வனவிலங்குகளுக்கு ஆபத்து நிறைந்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் பாய்ஸ்கம்பெனி முதல் எல்லநள்ளி வரை சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
The post குன்னூர் – ஊட்டி சாலையில் தூய்மைப்படுத்தும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் தீவிரம் appeared first on Dinakaran.