காஷ்மீரை ‘கை’ பற்றுமா?

1 week ago 5

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயக கட்சி அதிகபட்சமாக 28 இடங்களிலும், பாஜ 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. மெகபூபா முப்தி பாஜவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். ஆனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக அந்த அரசால் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய முடியவில்லை.

மெகபூபா முப்தி 19 ஜூன் 2018 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு துணைநிலை ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2019ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய பாஜ அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் என பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவி்த்தது. இதனால் வன்முறைகள்், கலவரங்கள் வெடித்தன. அதை அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டுக்குள் ஒன்றிய அரசு கொண்டு வந்த பிறகும் தேர்தல் நடத்தாமல் துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கையில், அம்மாநிலத்தில் 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.18, 25, அக்.1 என்ற மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையில் கண்காணிப்பு பணியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தாலும் பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கிவைத்து தேர்தலை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டுவதாக தகவல்கள் பரவின. இதையடுத்து சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள், புலனாய்வுக்குழுக்கள் தீவிர சோதனை நடத்தி ஆயுதங்களை கைப்பற்றியுள்ளன.  10 ஆண்டுக்கு பிறகு நடக்கும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜவுக்கு ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கடுமையாக பணியாற்றி வருகிறது.

அதே சமயம் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு மாதம் ரூ.3000 உரிமைத்தொகை, நபர் ஒருவருக்கு 11 கிலோ அரிசி இலவசம், ரூ.25 லட்சம் மருத்துவக்காப்பீடு, 11 லட்சம் அரசு பணிகள் நிரப்ப நடவடிக்கை, பண்டிட்களுக்கு மறுவாழ்வு திட்டம் என தங்கள் இலவச திட்டங்களை அள்ளி தெளித்து வருகிறது. மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜ தலைவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்புவோம் என்று உறுதி அளித்துள்ளது.

பாஜவுக்கு கடும் எதிர்ப்பு உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் 47 தொகுதிகள் உள்ளன. இதில் 28 இடங்களை பாஜ தவிர்த்துள்ளது. 19 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. செல்வாக்கு இல்லாத இடத்தில் வீம்புக்கு வேட்பாளர்களை நிறுத்தி கை சுட்டுக்கொள்ள அவசியமில்லை என்று பாஜ தலைமை கருதுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்த பாஜ மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை அறுவடை செய்து ‘கை’ பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post காஷ்மீரை ‘கை’ பற்றுமா? appeared first on Dinakaran.

Read Entire Article