'காங்கிரஸ் நாய்களை புதைப்போம்': மற்றொரு சர்ச்சையை கிளப்பிய சிவசேனா எம்.எல்.ஏ.

1 day ago 3

புதுடெல்லி:

இந்திய அரசியல் களத்தில் சமீப காலமாக விமர்சனங்கள் எல்லைமீறி போகின்றன. குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். சிலர் மிரட்டும் வகையிலும், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் பேசுகின்றனர். சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் தாக்கி அவர் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்வினையாற்றி வருகின்றனர். இவ்வாறு விமர்சனம் செய்தவர்களில் ராகுல் காந்திக்கு எதிராக வெறுக்கத்தக்க வகையிலும், அச்சுறுத்தும் தொனியிலும் பேசியதாக பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான தர்வீந்தர் சிங் மர்வா, ரகுராஜ் சிங், ரன்வீத் பிட்டு (மத்திய ரெயில்வே இணை மந்திரி) மற்றும் சிவ சேனா கட்சியின் எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் ஆகியோர் மீது டெல்லி தவுலக் ரோடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ. 11 லட்சம் வெகுமதி வழங்குவேன் என்று தெரிவித்த சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், "காங்கிரஸ் நாய்களை" புதைப்பேன் என்று கூறி அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கெய்க்வாட், சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே, தனது மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகவும், அந்த நிகழ்வில் எதாவது காங்கிரஸ் நாய் நுழைய முயன்றால் அதை அங்கேயே புதைத்துவிடுவேன் என்று அவர் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், "நான்தான் கருத்து தெரிவித்தேன், நானே மன்னிப்பு கேட்காத போது, முதல்-மந்திரி ஏன் அதனை செய்ய வேண்டும். நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 50 சதவிகிதம் மக்கள் இடஒதுக்கீட்டை பெற்று வரும் நிலையில், அதனை நீக்கக் கோரிய ராகுல் காந்திக்கு எதிரான கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் கெய்க்வாட். ஏற்கனவே, அவரின் காரை ஒரு போலீஸ் ஒருவர் கழுவும் காட்சிகள் இணையத்தில் பரவி வைரலானது. அதேபோல், புலியை வேட்டையாடி, அதன் பற்களை செயினாக கோர்த்து அணிந்திருந்த குற்றத்துக்காக கெய்க்வாட் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article