கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்

2 hours ago 4

சென்னை: டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கல்வி, இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். இதை தொடர்ந்து, அவர் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கும், புதிய கல்வி கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரியும் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி செல்வேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் அறிவித்து இருந்தார்.

அதன்படி, டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று (27ம் தேதி) சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார். நேற்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின் காலை 10.45 மணிக்கு பிரதமர் அலுவலகம் வந்தார். சரியாக 10.50 மணிக்கு பிரதமர் மோடியை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உடனிருந்தனர். பிரதமரை சந்தித்து விட்டு பகல் 11.35 மணிக்கு வெளியே வந்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடந்தது.பிரதமரை சந்தித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: பிரதமரை சந்தித்தேன். இந்த சந்திப்பு, இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமருடைய கையில்தான் இருக்கிறது. ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று மூன்று முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்தி இருக்கிறேன். முதலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.

இரண்டாவது கட்டப் பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்காக, 2019ம் ஆண்டு மாநில அரசின் நிதியில் இருந்தும், கடன் பெற்று பணிகளை துவக்கி, பின்பு ஒன்றிய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் இதை ஏற்றுக்கொண்டு, 2020ம் ஆண்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. ஒன்றிய நிதி அமைச்சர், இதற்காக ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-22ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து, ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம், இதற்கான ஒப்புதலை 2021ம் ஆண்டே வழங்கியது.

இந்த பணிகளுக்கு, இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரைக்கும் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால், இதற்கான ஒன்றிய அரசின் நிதி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி நிதியை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். இரண்டாவதாக, ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதியையும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு வழங்க வேண்டியது ரூ.2,152 கோடி.

இந்த தொகையில், முதல் தவணை இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் கையெழுத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. தேசிய கல்வி கொள்கையின் பல நல்ல கூறுகளை, ஏற்கனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்தி இருக்கிறது. செயல்படுத்திக் கொண்டும் வருகிறது. காலை உணவு திட்டம் போல, மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது.

ஆனால், தேசிய கல்வி குழுவின் ஒரு விதிமுறையான மும்மொழி கொள்கையை பின்பற்ற தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் மீதும், மொழி திணிப்பு இருக்காது என்று தேசிய கல்வி கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதற்கான ஷரத்து இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் திருத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததை காரணம் காட்டி, ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

உடனடியாக இந்த திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம். மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதார பிரச்னைகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில், மீன் பிடிக்க போகும் தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து துன்புறுத்துகிறார்கள். இதுபற்றி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் பலமுறை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும், இந்த சம்பவங்கள் தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 7 ஆண்டுகளில் மிக அதிக அளவு எண்ணிக்கையில், இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது. 191 மீன்பிடி படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக ஒன்றிய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி, இந்த மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் மீன்பிடி கருவிகளையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற இருக்கும், இந்தியா- இலங்கை இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். இலங்கையில், புதிய அரசு அமைந்திருக்கிறது. புதிய அதிபரிடம் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.

இந்த மூன்று முக்கிய கோரிக்கைகளையும் கவனமாக கேட்டுக்கொண்ட பிரதமர், இதுபற்றி விரைவாக கலந்தாலோசித்து முடிவுகளை தெரிவிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க தேவையான இந்த முக்கிய கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டிற்கு ஏராளமான கோரிக்கைகள் இருக்கிறது. அதையெல்லாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்; தொடர்ந்து வலியுறுத்தப் போகிறோம். இந்த மூன்று கோரிக்கைகளை மையப்படுத்தித்தான் இந்த சந்திப்பு நடந்தது.

* பிரதமருக்கு பரிசளித்த முதல்வர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தபோது, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிரதமருக்கு தடம் பெட்டகத்தை பரிசாக வழங்கினார். அந்த பெட்டகத்தில், திருநெல்வேலி வாழை நார் கூடை, புலிகாட் பனை ஓலை ஸ்டாண்ட், விழுப்புரம் டெரகோட்டா குதிரை சிற்பங்கள், கும்பகோணம் பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி பொன்னாடை, பவானி ஜமுக்காளம் இருந்தன.

* டெல்லியில் சோனியாவுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள அண்ணா அறிவாலயம் சென்றார். அதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள தன்பத் சாலையில் உள்ள அவரது இல்லம் சென்று சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* ‘கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்’
கேள்வி: கடந்தமுறை பிரதமரை சந்தித்தபோது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது, இந்த முறை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது. கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தாரா?
பதில்: அவர் பிரதமராக சந்தித்தார். நான் முதல்வராக சந்தித்தேன், அவ்வளவுதான். அனைத்து கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்டறிந்தார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், 15 நிமிடம் தான் நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியிருக்கிறோம். இதிலிருந்து சந்திப்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறியலாம்.
கேள்வி: தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து….
பதில்: அது தொடர்பாக பிரதமரிடம் விளக்கமாக கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். துறையினுடைய அமைச்சர் ஜெய்சங்கரிடத்திலும் பேசியிருக்கிறோம்.
கேள்வி: புதிய கல்வி கொள்கை பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா. கையெழுத்து போடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா. பிரதமர் அதற்கு என்ன பதில் சொல்லியிருக்கிறார்.
பதில்: பிரதமர் கலந்து பேசி சொல்வதாக கூறியுள்ளார்.
கேள்வி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நான்தான் நேற்றே (நேற்று முன்தினம்) சொல்லியிருக்கின்றேனே. துணிச்சலோடு இருந்திருக்கிறார். அவரின் துணிவை நாங்கள் பாராட்டுகிறோம். நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டத்தில் நீதிமன்றத்தில் போராடி அவர் விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது. அவருக்கும் இருக்கிறது.
கேள்வி: பிரதமருடனான இன்றைய சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அப்படி இருக்கிறதா?
பதில்: நாங்கள் எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், அதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கேள்வி: காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்களே…
பதில்: ஏற்கனவே, அது நீதிமன்றத்தில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

The post கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article