தர்மபுரி, பிப்.8: அரூர் அருகே உள்ள சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகள் நிதி (23). இவர் தனியார் கல்லூரியில் எம்.காம்., படித்து வருகிறார். கடந்த 5ம்தேதி இரவு வழக்கம் போல் உணவு சாப்பிட்டு விட்டு, தூங்க சென்றார். மறுநாள் காலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது, நிதியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அரூர் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். இதேபோல் காரிமங்கலம் அருகே உள்ள கோடாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி (42). இவர் கடந்த 4ம் தேதி மதியம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தனலட்சுமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கல்லூரி மாணவி, பெண் மாயம் appeared first on Dinakaran.