சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர ஜூன் முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த சில குடும்பத் தலைவிகள் இன்னும் இதில் இணையாமல் உள்ளனர். இந்நிலையில் மாதம் ரூ.1000 கிடைக்காத பெண்கள், எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூன் மாதம் 4ம் தேதி மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப் பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இத்திட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சென்னையில் இன்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம் எங்கெங்கு நடத்த வேண்டும் என்ற விவரங்களும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர ஜூன் முதல் விண்ணப்பம்..!! appeared first on Dinakaran.