கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவுக்காக பூஜிக்கப்பட்ட கம்பம் நடும் நிகழ்ச்சி

2 days ago 4

கரூர், மே 12: கரூரில் புகழ்பெற்ற கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவுக்கான கம்பம் நடும் விழா நேற்று காலை நடைபெற்றது. கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா மே 11ம்தேதி கம்பம் நடுதலுடன் துவங்கி ஜூன் 8 ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மே 28ம்தேதி அன்று நடைபெறும் கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி மற்றும் இதனைத் தொடர்ந்து நடைபெறும் வான வேடிக்கை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று ஒரு நாள் கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் அரசு விடுமுறை அளிக்கப்படும். கம்பம் நடும் விழாவினை முன்னிட்டு, பாலம்மாள்புரம் பகுதியில் இருந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட கம்பத்தை கோயில் அதிகாரிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கரூர் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வந்து நடுதல் நிகழ்வை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவினை முன்னிட்டு முக்கிய விழாக்களான பூச்சொரிதல் விழா மே 16ம் தேதி அன்றும், காப்பு கட்டுதல் 18ம்தேதி அன்றும், திருத்தேரோட்டம் 26ம் தேதி அன்றும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்வு மே 28ம்தேதி மாலை நடைபெறுகிறது. கம்பம் நடுதலை தொடர்ந்து, தொடர்ந்து கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீர் ஊற்றியும் சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள். மேலும், 25ம்தேதி முதல் 28ம்தேதி வரை நான்கு நாட்கள் மாவிளக்கு மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்வும், 26ம்தேதி முதல் 27ம்தேதி வரை இரண்டு நாட்கள் அக்னி சட்டி, அலகு மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்று காலை, கருர் மாநகராட்சிக்குட்பட்ட பாலம்மாள்புரம் பகுதிக்கு கம்பம் கொண்டு வரப்பட்டு, விநாயகர் கோயிலில் நேற்று காலை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி தரிசனம் மேற்கொண்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்விலும் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவுக்காக பூஜிக்கப்பட்ட கம்பம் நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article