கனமழை எச்சரிக்கை: 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு

3 hours ago 1

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது. அதேநேரம், காலை நேரங்களில் வெயில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட சற்று அதிகம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற மார்ச் 2-ந்தேதி வரை, கடலோர மாவட்டங்கள், தென்தமிழக மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மார்ச் 1-ந்தேதி (சனிக்கிழமை) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் சாய் குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அதற்கான உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாவட்டத்தின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Read Entire Article