கடையம்: கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலையடிவார கிராமங்களில் புகுந்து அங்கு உள்ள கால்நடைகளை வேட்டையாடி வருவதும் விளைநிலங்களுக்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடையம் அருகே கருத்தப்பிள்ளையூர், பங்களா குடியிருப்பு பகுதிகளில் கடந்த 17ம் தேதி முதல் தினமும் யானைகள் புகுந்து 150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழைகள், கம்பி வேலி ஆகியவற்றை சேதப்படுத்தியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பங்களாகுடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகேஷ் என்பவர் நடத்தி வரும் ஹாலோபிளாக் தொழிற்சாலைக்குள் யானை கூட்டங்கள் புகுந்து அங்கு 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து அங்கு குடிநீர் குழாய் பைப்புகளையும் உடைத்து சென்றுள்ளது. மலை அடிவாரப்பகுதிக்குள் யானைகள் வந்த நிலையில் நேற்று குடியிருப்பு பகுதிக்குள் யானை வந்ததால் இந்த பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
சிசிடிவி கேமராவில் பதிவு
பங்களாகுடியிருப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்ததை அடுத்து தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் மூன்று குட்டிகளுடன் மூன்று பெரிய காட்டு யானைகள் உணவு தேடியும், தண்ணீர் தேடியும் அலையும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
The post கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் யானைகள் புகுந்து அட்டகாசம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.